தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன், உடல் நலக்குறைவால் காலமானார்

Publish by: --- Photo :


சென்னை: மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் வயது மூப்பின் காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91.

 

நாமக்கல் மாவட்டம் சிவியாம்பாளையம் என்ற கிராமத்தில் பிறந்த செல்லப்பன், கணித ஆசிரியராக தனது பணியைத் தொடங்கினார். தமிழ் மீது ஆர்வம் கொண்டவர். சிறந்த பேச்சாளர். சென்னையில் வசித்து வந்த இவர், கடந்த சில நாட்களாக உடல் நலமின்றி இருந்தார். இச்சூழலில் வயது மூப்பின் காரணமாக சென்னையில் காலமானார்.

 

சிலப்பதிகாரம் குறித்த இவரது சொற்பொழிவுகள் புகழ் பெற்றவை. அதனால் ‘சிலம்பொலி’ என்னும் சிறப்புப்பெயருடன் அழைக்கப்பட்டார். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, சிலப்பதிகாரம், மணிமேகலை,பெருங்கதை, சீறாப்புராணம், இராவணக் காவியம் ஆகிய இலக்கியங்களைப் பற்றியும் தொடர்பொழிவுகள்  நிகழ்த்தியுள்ளார்.

 

இவர், உலகத் தமிழ் மாநாட்டு உதவி அலுவலர், தமிழ் வளர்ச்சி இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் என பல்வேறு பொறுப்புகளை திறம்பட செய்தவர். தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது உள்ளிட்டவற்றை பெற்றுள்ளார் ‘சிலம்பொலியாரின் அணிந்துரைகள்’ எனும் நூலுக்கு தமிழக அரசின் சிறந்த நூல்களில் திறனாய்வு பிரிவில் பரிசு பெற்றது.

 

மறைந்த சிலம்பொலி செல்லப்பனுக்கு தொல்காப்பியன், கொங்குவேள் என்ற மகன்களும் மணிமேகலை, கவுதமி, நகைமுத்து ஆகிய மகள்களும் உள்ளனர்.

*