புதுடெல்லி: தேர்தல் பிரசார கூட்டங்களில் கவனமாக பேச வேண்டும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை, தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், காசியாபாத் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அண்மையில் பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சியினர் பயங்கரவாதிகளுக்கு பிரியாணி வழங்குவார்கள்; பிரதமர் நரேந்திர மோடியோ அவர்களை ஒடுக்க வெடிகுண்டுகளையும், துப்பாக்கி குண்டுகளையுமே பரிசாக தருகிறார். இந்திய ராணுவம் மோடியின் சேனையாக இருக்கிறது என்று பேசி பரபரப்பை கிளப்பினார்.
இது எதிர்க்கட்சிகளுக்கு கடும் கோபத்தை வரவழைத்தது. அவரது பேச்சுக்கு பல்வேறு கட்சிகள் கண்டனத்தை தெரிவித்தன. இதற்கிடையே ஆதித்யநாத்தின் பேச்சு அடங்கிய விடியோவை, காசியாபாத் மாவட்ட தேர்தல் அதிகாரி, மத்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்க, விஷயம் இன்னும் சூடுபிடித்தது. இந்த விடியோவை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், யோகி ஆதித்யநாத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
தனது பேச்சு குறித்து விளக்கம் அளித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் கடிதம் அனுப்பினார். எனினும், அந்த விளக்கங்கள் தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று கூறியுள்ள தேர்தல் ஆணையம், இனிமேல் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளை யோகி ஆதித்யநாத் பேசக் கூடாது. பேசும் வார்த்தைகளில் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்து இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
*