8 வழிச்சாலை திட்ட வழக்கில் 8ஆம் தேதி தீர்ப்பு! தேர்தல் நேரத்தில் அதிமுக அரசுக்கு புது டென்ஷன்

சென்னை: சென்னை – சேலம் இடையிலான எட்டு வழிச்சாலைத்திட்டத்தை எதிர்த்த வழக்குகளில், வரும் 8 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. தேர்தல் நேரத்தில் சாதகமான தீர்ப்பு வருமா என்ற கவலை எடப்பாடி அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

 

தமிழக அரசு, மத்திய அரசின் பங்களிப்புடன் சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமைச்சாலையை அமைக்க முடிவு செய்தது. இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிலம் அளவிடும் பணிகள் தொடங்கின.

 

பசுமை வழிச்சாலை திட்டத்திற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் கையகம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

 

திட்டத்தை கைவிட வேண்டும் என்று விவசாயிகள் போராட்டங்ளில் ஈடுபட்டனர். மேலும், சில அமைப்புகள் சார்பில் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

இதையடுத்து, நிலம் கையகம் செய்ய, நீதிமன்றம் தடை விதித்தது. இவ்வழக்கில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் விளக்கம் தரப்பட்டது. இருதரப்பு வாதங்கள் நிறைவு பெற்றதை அடுத்து, இவ்வழக்கின் தீர்ப்பு வரும் 8 ஆம் தேதி, (திங்கள்கிழமை) வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

மக்களவை தேர்தல் நடைபெறும் நேரத்தில் சாதகமான தீர்ப்பு வருமா அல்லது பாதகமாக அமைந்துவிடுமா என்ற கவலை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

*


Leave a Reply