கோவை: தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனை என்ற பெயரில் அத்துமீறுவதாகக் கூறி, கோவையில் நகைக்கடைகளை மூடி அதன் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. அதன்படி, ரூ. 50 ஆயிரத்திற்கு அதிகமாக பணமோ, நகையோ, பொருட்களை கொண்டு செல்லும் பொழுது அதற்குரிய ஆவணங்கள் இருக்க வேண்டும். மீறி எடுத்துச்சென்றால், தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்படுகிறது.
இதனால், நகைக்கடைகள் வைத்திருப்போர், தங்கத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு கடைக்கு எடுத்துச்செல்வதில் பெரும் சிரமத்திற்கு ஆளாகினார்கள். உரிய ஆவணங்கள் இருந்தாலும் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை அதிகாரிகள், நகைகளை பறிமுதல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் தங்களது வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி கோவை காந்திபுரம், டவுன்ஹால், உக்கடம் பகுதிகளில் உள்ள நகைக்கடை உரிமையாளர்கள் கடைகளை அடைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
நகைக்கடை உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட கடைகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. இப்போராட்டத்தால், நகைக்கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் 2000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நகைகளை வாங்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
எனினும், பல நகைக்கடைகள் பாதி ஷட்டரை திறந்தும், முழுமையாக திறந்து வைத்தும் வழக்கம் போல் வியாபாரத்தை கவனித்து வருகின்றனர்.