--- --:--:-- --

டி.டி.வி. தினகரனை அதிமுகவில் இணைக்க வேண்டும்

01

டி.டி.வி. தினகரனை சேர்த்தால் டெல்டா தென் மாவட்டங்களில் அதிமுக பலம் பெறும் என எடப்பாடி பழனிசாமியிடம் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு, டிடிவி தினகரன் வேறு கட்சியை நடத்தி வருவதாக எடப்பாடி பழனிசாமி பதில் அளித்ததாக கும்பகோணம் பகுதிச் செயலாளர் பத்ம குமரேசன் தெரிவித்துள்ளார்.

 

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் இருந்து பல்வேறு நிர்வாகிகளும் அக்கட்சியில் இருந்து விலகி, தவெகவில் இணைந்துவருகின்றனர். அதேசமயம், தேர்தல் முடிவுகள் குறித்தும், அதிமுகவின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிப் பணிகள் குறித்தும் அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுடன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

 

அந்த வகையில் இன்று(6ஆம் தேதி) தஞ்சாவூர் மாநகர், கிழக்கு, மத்தியம், தெற்கு, சிவகங்கை ஆகிய அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அதிமுகவின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் பலரும் பங்கேற்று, தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

 

 

அதன்படி, தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பகுதிச் செயலாளர் பத்ம குமரேசன், ஆலோசனைக் கூட்டத்தில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார். இதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பதில் கொடுத்துள்ளார்.

 

 

ஆலோசனைக் கூட்டம் முடிந்து வெளியேவந்து செய்தியாளர்களைச் சந்தித்த பத்ம குமரேசன், “இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், டி.டி.வி. தினகரனை அதிமுகவில் சேர்க்க வேண்டும் எனும் எங்கள் பகுதியைச் சேர்ந்த தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில் இருக்கும் கருத்தை, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்தேன். அதனை கேட்ட எடப்பாடி பழனிசாமி, ‘டிடிவி தினகரன் தனியாக கட்சி நடத்திவருகிறாரே’ என பதில் அளித்தார். டி.டி.வி. தினகரன் அதிமுகவில் சேர்ந்தால் கட்சி பலமடைந்து, வருங்காலங்களில் அதிமுக நிச்சயம் ஆட்சி அமையும்” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon