45 வயது நபருடன் 20 வயது பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்ததால் பெண் தற்கொலை!
குடிக்க ஆசைப்பட்ட தந்தை, தனது வயது நபருக்கு தனது மகளை திருமணம் செய்து கொடுத்துள்ளார். மனமுடைந்த மணமகள் திருமணமான மூன்றே நாட்களில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 20 வயதேயான மகாலட்சுமி தற்போது உயிரோடு இல்லை. தனது திருமணம் குறித்து ஆயிரம் கனவுகளோடு இருந்த லட்சுமிக்கு அந்த மணவாழ்க்கையே எமனாக மாறியது எப்படி?
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வடுகன்தாங்கல் இபி காலனியைச் சேர்ந்தவர்கள் சாந்தகுமார், சம்பூரணம் தம்பதி. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் தாய் சம்பூரணம் ஆறு மாதங்களுக்கு முன்பு மரணமடைந்தார். குடிக்கு அடிமையான தந்தை சாந்தகுமார் அதே பகுதியில் பழக்கடை நடத்தி வரும் 45 வயதான சங்கரும் நண்பர்கள்.

எப்போதும் மதுபோதையில் உள்ள சாந்தகுமாரின் குடும்பத்தில் அவ்வப்போது தன்னாலான உதவிகளை செய்து வந்துள்ளார் அவர். 45 வயதாகியும் திருமணம் ஆகாத நிலையில் தன் மகள் மகாலட்சுமியை அவருக்கு திருமணம் செய்துவைக்க சாந்தகுமார் முடிவு செய்தார். மகளின் எதிர்ப்பையும் மீறி ஏப்ரல் 29-ஆம் தேதி விழுப்புரத்தில் உள்ள கோவில் ஒன்றில் திருமணம் நடத்தியுள்ளார்.
யாருக்கும் தெரியாமல் ஷங்கருக்கும் மகாலட்சுமிக்கும் அந்த கோவிலில் திருமணம் நடந்தது. திருமணமான மூன்று நாட்களும் தம்பதி மணமகள் வீட்டில் இருந்துள்ளனர். கனவுகளுடன் இருந்த மகாலட்சுமி தனது தந்தையின் கட்டாய நடவடிக்கையால் கடும் மன உளைச்சலில் இருந்தார்.
மே ஒன்றாம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் மகாலட்சுமி. வீட்டிற்கு வந்த கணவர் சங்கர் மனைவி மகாலட்சுமி தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்து போலீசார் சடலத்தை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் திருமணமான மூன்று நாட்களில் மணப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். தந்தை வயதுள்ள நபருக்கு தன்னை திருமணம் செய்து கொடுத்ததால் திருமணமான மூன்று நாட்களில் மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







