வன்முறையை உடனே தடுக்காமல் காத்திருந்தது எதற்காக..? டெல்லி போலீசுக்கு உச்ச நீதிமன்றம் சாட்டையடி!!
டெல்லி வன்முறைக்கு போலீசின் மெத்தனம் தான் காரணம் என்றும், வன்முறை வெடித்த போது அதனை தடுக்காமல் யாருக்காக போலீஸ் காத்திருந்தார்கள் என்றும் உச்ச நீதிமன்றம் சாட்டையை சுழற்றியுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லி ஷாகீன்பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. சாலையை மறித்து போராட்டக்காரர்கள் போராடி வருவதால் போக்குவரத்து தடைப்பட்டு கிடக்கிறது. இதனால் போராட்டக்காரர்களை வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிப்படுத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இதனால், ஷாகீன் பாக் பகுதியில் உள்ள நிலைமையை நேரில் அறிந்து அறிக்கை தாக்கல் செய்ய ஒரு குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தி வந்தது. இந்தக் குழு இன்று உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அப்போது, டெல்லியில் தற்போது வெடித்துள்ள வன்முறை தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டெல்லி காவல்துறையின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து விளாசித் தள்ளியுள்ளனர்.

போராட்டம் நடத்துபவர்கள் பொதுச் சாலையை மறித்து நடத்துவது ஏற்புடையதல்ல. டெல்லி போலீஸ் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுத்திருக்க . காவல்துறை மெத்தனமாக நடந்து கொண்டதே பிரச்னை பெரிதாக காரணம். டெல்லியில் வன்முறை வெடித்த போதும் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை எதற்காக காத்திருக்க வேண்டும்.டெல்லியில் நடைபெற்ற வன்முறை துரதிருஷ்டவசமானது.
டெல்லி போலீசார் சுதந்திரமாக செயல்படாததே கலவரம் பெரிதாகி இவ்வளவு வன்முறைக் களமாக மாறிவிட்டது. இது போன்ற சூழலில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் காவல்துறையினர் எவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதைப் பார்த்து டெல்லி போலீஸ் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதி மன்ற நீதிபதிகள் கடுமையாக சாடினர்.
தொடர்ந்து ஷாகீன் பாக் போராட்டம் தொடர்பாக தற்போதைக்கு எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது. முதலில் பதற்றம் தணியட்டும். இதற்கு இரு தரப்புமே அமைதி காக்க வேண்டியதும் அவசியம் என அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கு விசாரணையை மார்ச் 23-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.






