மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் திடீர் சலசலப்பு..!
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், 871 பேரில் 113 பேருக்கு மட்டுமே ஆளுநர் பட்டம் வழங்குவார் என அறிவிப்புக்கு எதிராக மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது.
முன்னதாக இந்த விழாவில் மொத்தம் 37 ஆயிரத்து 877 பேர் பட்டம் பெற உள்ளதாகவும், இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொண்டு நேரடியாக 871 பேருக்குப் பட்டங்களை வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை பட்டமளிப்பு விழா தொடங்கியது.
இந்நிலையில், பட்டமளிப்பு விழாவில் 871 பேருக்கு நேரடியாகப் பட்டங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பதக்கம் பெறும் 113 பேருக்கு மட்டுமே ஆளுநர் நேரடியாகப் பட்டங்கள் வழங்குவார் என அறிவிக்கப்பட்டது.
இதனால் ஆளுநரிடம் நேரடியாகப் பட்டங்களைப் பெறுவோம் என்ற நம்பிக்கையில் வந்த மாணவ, மாணவிகளுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. இதனால் பட்டமளிப்பு விழாவிற்கு வந்திருந்த மாணவிகள் பலர் கண்ணீர் விட்டு அழுதனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மாணவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டதாகவும், ஆளுநரே பட்டம் வழங்குவார் என்றும் ஆளுநரின் செயலாளர் சஜன்சிங் சவான் அறிவித்துள்ளார்.
முன்னதாக இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட வேண்டும் என்று ராஜ்பவனில் இருந்து உத்தரவு வந்திருப்பதாகத் துணைவேந்தர் சந்திரசேகர் தெரிவித்திருந்தார். இதற்குப் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சரும் பல்கலைக்கழக இணை வேந்தருமான விசுவநாதன் விழாவைப் புறக்கணித்துள்ளார்.
அதேபோல நெல்லை திமுக எம்.பி. ராபர்ட் புரூஸ், நெல்லை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. முருகனும் விழாவைப் புறக்கணித்தனர். இந்த விழாவில் ஆளுநர் அர்லேகர் பங்கேற்கும் நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.






