தேர்தலில் அண்ணாமலை போட்டியிடாதது ஏன்? – பியூஷ் கோயல்!
தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பணியாற்ற விரும்பியதால் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடவில்லை என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அத்தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக தேசிய தலைமை அறிவித்துள்ளது. அதன்படி, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், இம்முறை அவிநாசியில் களம் இறங்குகிறார்.
கடந்த முறை நெல்லை தொகுதியில் போட்டியிட்ட பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், இம்முறை சாத்தூரில் களம் காண்கிறார். அதேபோல, 5 பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆளுநராக இருந்து மீண்டும் அரசியல் களத்திற்கு வந்துள்ள தமிழிசை சௌந்தரராஜன் மயிலாப்பூரில் போட்டியிடுகிறார்.
கடந்த தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் களம் கண்ட வானதி ஸ்ரீனிவாசன், இம்முறை கோவை வடக்கில் களம் இறக்கப்பட்டுள்ளார். காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதாரணி விளவங்கோடு தொகுதியிலும், மொடக்குறிச்சியில் சிட்டிங் எம்.எல்.ஏ. சரஸ்வதியின் மருமகள் கிருத்திகாவுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பியூஷ் கோயல், அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்காதது குறித்து பதிலளித்தார். அப்போது பேசிய அவர், ‘கட்சிக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் செயல்வீரர் அவர். ஒரேயொரு தொகுதியின் எல்லைக்குள் மட்டும் முடங்கிக்கிடக்காமல், தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பணியாற்ற விரும்பியதால் அண்ணாமலை போட்டியிடவில்லை என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பதிலளித்தார்.
இதனிடையே, கேரளாவில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “இந்தத் தேர்தலில், தமிழகம் முழுவதும் வேட்பாளர்களுக்காகப் பிரச்சாரம் செய்வதே எனது பணி. தற்போது, புதுச்சேரி மற்றும் கேரளாவில் 7ஆம் தேதி வரை பிரச்சாரம் செய்யும் பொறுப்பை கட்சி எனக்கு வழங்கியுள்ளது. 7ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பாஜக மற்றும் என்டிஏ வேட்பாளர்களுக்காகவும் நான் பிரச்சாரம் செய்ய வேண்டும். அதுதான் கட்சி எனக்கு வழங்கிய பொறுப்பு. நான் அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவேன்,” என்றார்.





