--- --:--:-- --

தி.மு.க ஆட்சியில் தொடங்கிய அகழாய்வுப் பணிகள் த.வெ.க அரசிலும் தொடர வேண்டும் : ஸ்டாலின் வலியுறுத்தல்

8

தென்காசி மாவட்டம் மலையடிப்பட்டியில் முந்தைய தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்டுத் தொடர்ந்து நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வுப் பணிகளை முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

 

மக்கள் வாழிவிடப் பகுதியில் அமைந்திருந்த ஈராயிரம் ஆண்டுகள் பழமையான செங்கல் படிக்கட்டுக் கிணறு, கீழடியின் கண்டுபிடிப்புகளுக்கு ஒத்த கட்டுமானச் சுவடுகள், கருப்பு-சிவப்பு பானை ஓடுகள் மற்றும் கண்ணாடி மணிகள் உள்ளிட்ட பல்வேறு தொல்பொருட்கள் அங்கு கண்டறியப்பட்டுள்ளன. இந்த மலையடிப்பட்டி அகழாய்வானது கீழடி மற்றும் ஆதிச்சநல்லூரைப் போல தமிழ்நாட்டின் தொன்மையான வரலாற்றுக்கு ஒரு புதிய வெளிச்சம் பாய்ச்சும் மிக முக்கியத்துவம் வாய்ந்த அகழாய்வாக அமையும் என்று தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தளப் பதிவில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

 

இப்பதிவை மேற்கோள் காட்டி தி.மு.க தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் புதிய அரசுக்கு முக்கியக் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். தமிழரின் வரலாற்றையும் பண்பாட்டையும் குறைத்துக் கூறியும், சிதைத்து எழுதியும், திரிபுவாதங்களால் திசைதிருப்பும் சூழ்ச்சிகள் அரங்கேறும் தற்போதைய காலத்தில், நமது தொன்மை உண்மைச் சான்றுகளோடு வெளிப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், முந்தைய திமுக அரசு தொடங்கிய அகழாய்வுப் பணிகளைப் புதிய அரசும் தொடர்ந்து மேற்கொண்டு, தமிழர் வரலாற்றுத் தடங்களை உலகறியச் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மண்ணுக்குள்ளும் ஆழ்கடலுக்குள்ளும் மறைந்திருக்கும் இன்னும் பல கீழடிகளை மேலே கொண்டு வந்து, இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றினைத் தெற்கிலிருந்து தொடங்கி எழுதுவோம் என்றும் அவர் பெருமிதத்தோடு பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon