டோக்கன் பெறாதவர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு எப்போது?
பொங்கல் பரிசுக்கான டோக்கன் பெறாதவர்களுக்கு சிறப்பு தொகுப்பு எப்போது வழங்கப்ப்டும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பில் சிறப்பு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேசன் கடைகளில் டோக்கன் வழங்கப்பட்டு 1,000 ரூபாயுடன் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
முன்னதாக கடந்த ஜனவரி 7 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை ரேசன் கடைகளில் சிறப்பு தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டன. இதற்கிடையே ஜனவரி 10 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்ட நேரத்தில் ரேசன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பை குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் பொங்கல் சிறப்பு தொகுப்பை 13 ஆம் தேதிக்குள் பெற முடியாதவர்கள் 14 ஆம் தேதி பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே டோக்கன்கள் கிடைக்கப்பெறாத அரிசி குடும்ப அட்டைதாரர்கள் வரும் ஜனவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் அவர்களின் நியாய விலை கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





