பொங்கலையொட்டி இன்று தியேட்டர்களில் வெளியாகும் 4 திரைப்படங்கள்!
பொங்கலை ஒட்டி இன்று தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் படங்கள் வெளியாக உள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. பொங்கல் பண்டிகைக்கு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரின் படங்கள் வெளியாவது வழக்கம்.
கடந்தாண்டு விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு உள்ளிட்ட படங்கள் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகின. ஆனால் இந்தாண்டு உச்ச நட்சத்திரங்களின் எந்த படமும் வெளியாகவில்லை.
மாறாக வரலாற்று திரைப்படமாக தயாரான தனுஷின் கேப்டன் மில்லர் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஸ், சுந்தீப் கிஷான் என பல முன்னணி பிரபலங்கள் நடித்திருக்கும் அதிரடி – திரில்லர் திரைப்படம். முற்றிலும் ஆக்ஷன் திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்தை, தயாரிப்பாளர் தியாகராஜனின் சத்யா ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரித்துள்ளது.
லைக்கா நிறுவனம் கேப்டன் மில்லர் படத்தினை விநியோகம் செய்யவுள்ளது. 3 ஆண்டின் கடின உழைப்பின் பலனாக படம் இன்று வெளியாகிறது என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.
இதேபோல் வேற்றுகிரகவாசியை கதைக்களமாக கொண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாரான அயலான் படமும் இன்று திரைக்கு வருகிறது.இவை தவிர்த்து அருண்விஜய் மற்றும் எமி ஜாக்சன் நடித்துள்ள மிஷன் அத்தியாயம் ஒன்று, விஜய் சேதுபதி நடித்த பான் இந்திய திரைப்படமான மெரி கிறிஸ்துமஸ் படமும் இன்று வெள்ளித்திரை காண்கின்றன.
பண்டிகைக்காலத்தையொட்டி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படாமல், வழக்கம் போல் காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்க உள்ளது. பொங்கலையொட்டி இன்று தியேட்டர்களில் வெளியாகும் 4 திரைப்படங்கள்!





