--- --:--:-- --

ராமதாஸ் உடல்நலக் குறைவுக்கு என்ன காரணம்?

1

சேலத்தில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த பாமக நிறுவனர் ராமதாஸ், திடீரென மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மேற்கு தொகுதி வேட்பாளரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான அருளை ஆதரித்து சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் பரப்புரையை ராமதாஸ் மேற்கொண்டார். சேலம் பள்ளப்பட்டியில் பரப்புரையை முடித்து மேடையில் இருந்து இறங்கியபோது திடீரென அவர் மயக்கமடைந்தார். உடனடியாக, ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்தி உள்ளிட்டோர் தனியார் மருத்துவமனைக்கு அவரை காரில் அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து ராமதாஸ் மற்றொரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

 

தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்த அவரை மருத்துவர் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். முதற்கட்ட சிகிச்சை முடிந்து மருத்துவமனை மேலாண்மை இயக்குனர் அர்த்தனாரி மற்றும் மருத்துவர் ராஜேஷ் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மருத்துவர், “மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு வயது அதிகமாக உள்ளது. தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் உடல் சோர்வு ஏற்பட்டு மயக்க நிலைக்கு சென்றுள்ளார். தற்போது அவர் நலமாக இருக்கிறார். 24 மணி நேர மருத்துவ கண்காணிப்பில் இருக்க மருத்துவர்கள் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடரலாம்” எனத் தெரிவித்தனர்.

குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், ராமதாஸ் சிகிச்சை பெற்று வந்த கோகுலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இருந்து சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தரன் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார்.

இதற்கிடையே, இன்று காலை ராமதாஸ் சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தரன் மருத்துவமனையில் இருந்து சென்னை அழைத்து வரப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவர்களிடம் அவர் சிகிச்சை பெற திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon