ஆழி தொட்ட தமிழனின் ஆதி வர்த்தகம்.. தூத்துக்குடியில் பூத்த 6,000 வரலாற்று அற்புதங்கள்! கீழடி, கொற்கையைத் தொடர்ந்து உலகை வியக்க வைக்கும் பட்டினமருதூரின் பூர்வீகப் பெருமை!
தூத்துக்குடியில் வெளிகொணரப்பட்ட பூர்வீகப் புதையல். மண்ணில் புதைந்துகிடந்த மற்றொரு பண்டைய தமிழரின் வரலாற்றுப் பேரதிசியம் உலகிற்கு வெளிச்சமாகியுள்ளது. தருவைகுளம் அருகே உள்ள பட்டினமருதூரில் நடைபெற்று வரும் அகழாய்வில், நம் முன்னோர்களின் கடல்சார் வர்த்தகச் செழிப்பையும் தொழில்துறை மேன்மையையும் பறைசாற்றும் வகையில் 6,000-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசின் 2025–26 நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டு, இந்திய தொல்லியல் துறையின் அனுமதியோடு கடந்த மார்ச் 17 முதல் இங்கு தீவிர அகழாய்வு நடந்து வருகிறது.
அறிவியல் முறைப்படி 4 மீ × 4 மீ அளவில் அமைக்கப்பட்ட 10 அகழாய்வுக் குழிகளில், 10 அடி ஆழத்திலேயே தமிழனின் கடல்சார் நாகரிகத்தின் மகுடமாகப் பல தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

மண்ணில் மலர்ந்த மகத்தான தொல்பொருட்கள்!
* பழங்காலச் சங்குகள், சங்கு வளையல்கள், பாசி மணிகள், கவுரி சிப்பிகள் மற்றும் சுடுமண்ணால் ஆன அலங்கார வளைகள்.
* பழங்கால உறை கிணறுகள், கற்களால் செதுக்கப்பட்ட வலுவான சுவர்கள் மற்றும் சுடுமண் வடிகால் குழாய்கள்.
* சீன நாணயங்கள் மற்றும் உலகப் புகழ்பெற்ற சீன நாட்டின் 4 வகையான ‘செலடான்’ பீங்கான் ஓடுகள்.
ஆய்வாளர் அஜய் ‘குற்றம் குற்றமே’ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பகிர்ந்த வியப்பூட்டும் உண்மைகள்!
இது குறித்து தொல்லியல் துறை ஆய்வாளர் அஜய், ‘குற்றம் குற்றமே’ செய்தி நிறுவனத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில் பல்வேறு வியப்பூட்டும் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். 200 ஏக்கரில் இயங்கிய மாபெரும் சங்குத் தொழிற்சாலை, அதிகளவில் முழுச் சங்குகளும், அவற்றை அறுத்துப் பெறப்பட்ட கழிவுகளும் கிடைத்திருப்பது குறித்து ஆய்வாளர் அஜய் ‘குற்றம் குற்றமே’ நிறுவனத்திடம் பேசும்போது, “சுமார் 200 ஏக்கருக்கும் அதிகமான பிரம்மாண்ட பரப்பளவில் சங்கு ஆபரணங்கள் தயாரிக்கும் மாபெரும் தொழிற்சாலை இங்கு இயங்கி வந்திருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

கடலிலிருந்து முழுச் சங்குகளைச் சேகரித்து, அவற்றை வளையல்களாகவும் அணிகலன்களாகவும் செதுக்கி ஏற்றுமதி செய்துள்ளனர். சீனாவுடனான நேரடி கடல் வர்த்தகம், சீனச் செலடான் மண்பாண்டங்களும் நாணயங்களும் கிடைத்திருப்பது, பட்டினமருதூர் பண்டைய காலத்தில் சீனாவுடன் நேரடி கடல்வழி வர்த்தகத் தொடர்பில் இருந்ததை உறுதி செய்கிறது.
மேலும், இடைக்காலத்தில் ஆதிக்கம் செலுத்திய “திசையாயிரத்து ஐந்நூறு” என்ற சர்வதேசப் புகழ்பெற்ற வணிகக் குழுவின் முதன்மைத் தளமாகவும் இது இருந்திருக்க வாய்ப்புள்ளது.

வியப்பில் தொல்லியல் உலகம்
பொதுவாக ஒரு தொல்லியல் களத்தில் 1,000 பொருட்களுக்கும் குறைவாகவே கிடைக்கும் சூழலில், பட்டினமருதூர் ஒன்றிலேயே 6,000-க்கும் மேற்பட்ட பொருட்கள் குவிந்திருப்பது ஆய்வாளர்களைப் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
தமிழனின் பூர்வீகப் பெருமை
வைகைக்கரைக் கீழடி, பொருநைக்கரைக் கொற்கையைத் தொடர்ந்து, இப்போது தூத்துக்குடியின் பட்டினமருதூர் தமிழர்களின் உலகளாவிய வணிக ஆளுமைக்கும் தொழில் திறனுக்கும் மீண்டும் ஒரு வரலாற்றுச் சான்றாக உருவெடுத்துள்ளது. இதன் துல்லியமான காலக்கட்டத்தை அறிய மேலதிக ஆய்வுகள் தொடர்ந்து வருகின்றன.
by; செய்தியாளர்/ மணிகண்டன்
📱 Share on WhatsApp 𝕏 Share on X





