வீதி வீதியாக வாக்கு வேட்டையில் ஈடுபட்ட அமைச்சர் சாமிநாதன்!
காங்கேயம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைச்சர் சாமிநாதன் இரவில் வாக்கு சேகரித்தார்
வெள்ளகோவில்: காங்கேயம் தேர்தல் களம் உச்சகட்டப் பரப்பை எட்டியுள்ள நிலையில், திமுக வேட்பாளர் அமைச்சர் சாமிநாதன், வெள்ளகோவில் நகராட்சியின் பல்வேறு வார்டுகளில் மின்னல் வேகப் பிரச்சாரத்தை முன்னெடுத்தார்.
தொடர் பிரச்சாரமும் – மக்களின் வரவேற்பும்
நாச்சிபாளையம் பகுதியில் தனது பரப்புரையைத் தொடங்கிய அமைச்சர், அதனைத் தொடர்ந்து பச்சபாளி, கரட்டுப்பாளையம் மற்றும் கரட்டுப்பாளையம் கிழக்கு ஆகிய பகுதிகளில் தீவிரமாக வாக்கு சேகரித்தார். பெரியசாமி நகர் மற்றும் செம்மாண்டம்பாளையம் பகுதிகளில் அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வழிநெடுகிலும் திரண்டிருந்த முதியவர்கள் மற்றும் பெண்களிடம் கைகுலுக்கி, திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களின் பயன்களை அவர் நினைவுபடுத்தினார்.
குறிப்பாக கிறிஸ்துவதெரு, ராஜீவ் நகர் மற்றும் நத்தமேடு பகுதிகளில் சிறுபான்மையின மக்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் அமைச்சர் உரையாற்றினார். மணிவேல் தியேட்டர் பகுதி மற்றும் சொரியாங்கிணத்துப்பாளையம் (மேற்கு மற்றும் கிழக்கு) பகுதிகளில் நடந்த பொதுக்கூட்டத்தில், இப்பகுதியின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான உறுதிமொழிகளை அவர் வழங்கினார்.

நவீன வெள்ளகோவில்- அமைச்சர் உறுதி!
பிரச்சாரத்தின் போது அமைச்சர் முன்வைத்த முக்கிய அம்சங்கள்: பெண்களுக்கான கட்டணமில்லாப் பேருந்து வசதி மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டு, தரமான போக்குவரத்துச் சேவை உறுதி செய்யப்படும். விவசாயிகளுக்குத் தடையற்ற மின்சாரம் மற்றும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கத் தேவையான சேமிப்புக் கிடங்கு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று உறுதி அளித்தார்.
வெள்ளகோவியில் நகராட்சிப் பகுதிகளில் சுகாதாரமான குடிநீர் விநியோகம் மற்றும் நவீன தெருவிளக்கு வசதிகள் முழுமையாகச் சீரமைக்கப்படும். வெள்ளகோவில் நகராட்சிப் பகுதிகளில் தார்ச் சாலைகள், தடையற்ற குடிநீர் விநியோகம் மற்றும் நவீன வடிகால் வசதிகள் முன்னுரிமை அடிப்படையில் செய்து தரப்படும். மக்களின் குறைகளைத் தீர்ப்பதே எனது தலையாயக் கடமை. கடந்த கால சாதனைகளே வரும் கால வெற்றிக்கான அஸ்திவாரம் என அமைச்சர் சாமிநாதன் தனது உரையில் குறிப்பிட்டார்.
அமைச்சரின் இந்தப் பயணத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் உள்ளூர் பிரதிநிதிகள் திரளாகப் பங்கேற்றனர். தொகுதியின் மூலைமுடுக்கெல்லாம் உதயசூரியன் முழக்கம் எதிரொலிப்பதால் திமுக தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.





