நெகிழித் தடையை மீறியோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது?
தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழி பொருட்களுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தமிழக அரசு தடை விதித்தது.
ஆனால் அதனையும் மீறி நெகிழிப் பொருட்கள் தொடர்ந்து உற்பத்தி செய்யப்படுவதாகவும் அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரியும் தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இதனை விசாரித்த பசுமை தீர்ப்பாய அமர்வு தடையை மீறி நெகிழிப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தவறிழைத்தவர்கள் இடமிருந்து வசூலிக்கப்பட்ட அபராத தொகை எவ்வளவு? நெகிழி தடை அரசு ஆணையை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்ற கேள்வியை எழுப்பியது.
இது குறித்து இரண்டு மாதங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.







