--- --:--:-- --

சென்னை செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் நீர் திறப்பு அதிகரிப்பு..!

3

சென்னை அருகே உள்ள செம்பரம்பாக்கம் மற்றும் பூண்டி ஏரிகளில் நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும் நிலையில், பொதுமக்களுக்கு அச்சம் வேண்டாம் என நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர் வரத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு இரண்டாயிரத்து 170 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.

 

இதனால், ஏரியின் நீர்மட்டம் 21 அடியை எட்டியது. இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியின் ஐந்து கண் மதகுகளில் 3 ஷட்டர்கள் வழியாக விநாடிக்கு 500 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகள் உள்ள குன்றத்தூர், திருமுடிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நீர் ஆர்ப்பரித்து செல்வதை பொதுமக்கள், ஆபத்தை உணராமல் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

 

பூண்டி அணைக்கான நீர்வரத்தும் விநாடிக்கு இரண்டாயிரத்து 900 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், அணையின் மொத்த நீர்மட்டமான 35 அடியில் 33 அடி நிரம்பியது. இந்நிலையில், பூண்டியில் இருந்து கொசஸ்தலையாற்றில் விநாடிக்கு 4 ஆயிரத்து 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதே போன்று, புழல் ஏரிக்கு விநாடிக்கு 860 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.

 

இதனால், புழல் ஏரியில் இருந்து விநாடிக்கு 500 கன அடிநீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சென்னைக்கு குடிநீர் ஆதாரங்களான செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகியவற்றில் போதுமான இடைவெளியில் முன்கூட்டியே நீர் திறக்கப்பட்டு பராமரிக்கப்படுவதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.

 

இதனால், மிக கனமழை பெய்தாலும், நீர் திறப்பின் அளவு மட்டுப்படுத்தப்பட்டு அடையாறு மற்றும் கொசஸ்தலையாற்றின் வழியாக உபரி நீர் கடலுக்கு சென்றடையும் என கூறப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என நீர்வளத்துறையின் தலைமைப் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon