--- --:--:-- --

முடியல அண்ணா..சீக்கிரம் வாங்கண்ணா…! அலட்சியமான ஆம்புலன்ஸ் சேவையால் பறிபோன உயிர்!

6

காஞ்சிபுரத்தில் மூச்சுத்திணறலால் தவித்த கல்லூரி மாணவர் 108 ஆம்புலன்ஸ் சேவையை நாடிய போது உரிய நேரத்தில் உதவி கிடைக்காமல் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. இதுபோன்ற நிலை மீண்டும் ஏற்படாமல் தவிர்க்க உதவி கோருவோரின் இருப்பிடத்தை அறியும் அதிநவீன வசதியை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

 

காஞ்சிபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவன் கணேஷ்குமார் தான் ஆம்புலன்ஸ் கோரி செல்போனில் பேசியவர். கடந்த ஞாயிறு அன்று பச்சையப்பன் மேல்நிலை பள்ளி மைதானத்தில் தனியே இருந்த அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் அனுப்புமாறு கேட்டு 108 சேவைக்கு கணேஷ்குமார் பேசியபோது அதுகுறித்து ஊழியருக்கு புரியாமல் போகிறது.

 

இதனிடையே கணேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் ஆம்புலன்ஸ் சேவை கேட்டு செல்போனில் பேசியது தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆறு மாதங்களுக்கு முன்பு இதேபோல கணேஷ்குமார் தனியாக இருந்த போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனையில் சேர்த்ததாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

 

ஆனால் தற்போது அவரது உயிரை காக்க ஆம்புலன்ஸ் வரவில்லை என்று கண்ணீருடன் கூறுகின்றனர் அவர்கள். மகளிருக்கான அவசர உதவிக்காக காவல்துறை அமல்படுத்தியுள்ள காவலன் செயலியில் உதவி கூறுவோரின் இருப்பிடத்தை அறிந்து கொள்ள வசதி உள்ளது. அதை போல 108 சேவைக்கு அழைப்போரின் இருப்பிடத்தையும் அறிந்து கொள்ளும் வசதியை ஏற்படுத்தினால் பல உயிர்கள் காப்பாற்றப்படும் என்று கணேஷ் குமாரின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் சேவையின் தலைமை மேலாளர் செல்வாவிடம் கேட்டபோது இவ்விஷயம் தற்போது தான் தனது கவனத்திற்கு வந்து இருப்பதாகவும் உடனே உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.

Leave a Reply

Right Menu Icon