விளாத்திக்குளம் திமுக எம்.எல்.ஏ கைது..!
முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார். கோவில்பட்டியில் நேற்று முன்தினம் இரவு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய அவர், முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் கொடுக்கும் வகையில் பேசியதாக புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று முன்தினம் இரவு திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பேசிய போது, சட்டமன்றத்தை கூட்டும் போது உனக்கு (முதலமைச்சர் விஜய்) எலும்பு இருக்காது உடைத்து விட்டு தான் அனுப்பி விடுவோம் சட்டமன்றத்தை கூட்டிப்பார் என்று பேசி இருந்தார்.
விளாத்திக்குளம் எம்எல்ஏ மார்க்கண்டேயனின் இந்த பேச்சு சர்ச்சையான நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த புகாரின் அடிப்படையில் விளாத்திக்குளம் எம்எல்ஏ மார்க்கண்டேயனை இன்று காலை போலீசார் கைது செய்தனர். மார்க்கண்டேயன் கைது நடவடிக்கையை எதிர்த்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.






