--- --:--:-- --

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது..!

02

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், தொகுதி மறுவரையறைக்கான மசோதாவை மீண்டும் தாக்கல் செய்து நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் மத்திய பாஜக அரசு இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது. இதில், 6 முக்கிய மசோதாக்களை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

 

குறிப்பாக, அந்நியப் பங்களிப்பு திருத்த மசோதா, வருமான வரி மசோதா, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை 33 இல் இருந்து 37 ஆக உயர்த்தும் மசோதா, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு திருத்த மசோதாவையும் மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது.

 

 

ஒரு குழந்தை பிறந்து அல்லது ஒருவர் இறந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு தாமதமாக செய்யப்படும் பதிவுகளுக்கு முதல் வகுப்பு நீதித்தறை நடுவர் உத்தரவு தேவை என்ற சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று கருதப்படுகிறது. வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வகை செய்யும் தேசிய அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதாவும் இந்த கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

இதற்கிடையே, கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் பாதிப்பாக, திரிணாமுல் காங்கிரஸின் 28 எம்பிக்களில் 20 பேர் மமதா பானர்ஜிக்கு எதிராகத் திரும்பி பாஜக கூட்டணியில் ஐக்கியமாகி உள்ளனர். தமிழ்நாட்டில் காங்கிரஸ் திமுக கூட்டணி முறிந்துள்ள நிலையில், உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியிலிருந்து 6 எம்பிக்கள் ஏக்நாத் ஷிண்டே பிரிவிற்குத் தாவி உள்ளனர்.

 

 

இந்த அரசியல் சூழல்களை தனக்கு சாதமாக மாற்றி எதிர்க்கட்சி எம்பிக்களின் குறுக்கு வாக்குகளைப் பெற்று, கடந்த பட்ஜெட் கூட்டத்தில் தோல்வியடைந்த தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற பாஜக தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அதே சமயம், நீட் தேர்வு முறைகேடுகள், அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை நில ஊழல் குற்றச்சாட்டுகள், பெட்ரோலில் எத்தனால் கலப்பு போன்ற விவகாரங்களை முன்னிறுத்தி குரல் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

 

 

ஞாயிற்றுக்கிழமை நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் திரிணமுல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி.க்கள் 20 பேரை இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சி என்ற பெயரில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் செய்த அடையாள வெளிநடப்பு, இந்த கூட்டத்தொடர் புயலைக் கிளப்பும் என்பதற்கான அறிகுறியாக அமைந்துள்ளது.

 

 

எதிர்க்கட்சிகளின் இந்த வெளிநடப்பு குறித்துப் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெற அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றார். கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த திமுக, அதிமுக எம்பிக்கள், தங்கள் கட்சியின் நிலைப்பாடுகளை விவரித்தனர். சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் டெல்லி போலீசாரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அழைப்பு விடுத்துள்ளதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Leave a Reply

Right Menu Icon