விஜய்க்கு பாதுகாப்பு இல்லை – கடிதம் எழுதிய தவெக
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக குற்றஞ்சாட்டி அக்கட்சி சார்பில் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், தற்போது அமைச்சகத்தில் செயலாளராக பதவியில் இல்லாத, மணிப்பூர் ஆளுநரின் பெயர் குறிப்பிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. குறிப்பாக ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பில் தவெக தலைவர் விஜய் இருக்கிறார். ஆனால், அவருடைய தேர்தல் பிரச்சாரத்தின் போது போதிய அளவிற்கான பாதுகாப்பு இல்லை” என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த 30ஆம் தேதி தவெக தலைவர் விஜய், தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து, பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம் ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி பெற்று திட்டம் வகுக்கப்பட்டது.
அதுபோலவே, பெரம்பூரிலும், கொளத்தூரிலும் பிரச்சாரம் மேற்கொண்ட விஜய், அடுத்து வில்லிவாக்கம் செல்வதற்கு போதிய பாதுகாப்பு இல்லை என்றும், பிரச்சாரத்தில் பங்கேற்கும் பொதுமக்களுக்கும் போதுமான பாதுகாப்பு இல்லை என கூறி பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு இது தொடர்பாக தவெக தரப்பில் இருந்து புகார் கடிதம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், அந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தவெக தரப்பில் இருந்து அக்கட்சி நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல்குமார் கடிதம் அனுப்பியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தவெக தரப்பில் இருந்து உள்துறை அமைச்சகத்திற்கு எழுதியிருக்கும் கடிதம் வெளியானது. அதில் உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் என குறிப்பிட்டு, மணிப்பூர் ஆளுநராக இருக்கும் அஜய் குமார் பல்லாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது அக்கட்சியினர் உட்பட அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின் செயலாளராக இருந்த அஜய் குமார் பல்லா, மாற்றப்பட்டு அந்தப் பொறுப்புக்கு கோவிந்த் மோகன் நியமிக்கப்பட்டு, அவர் உள்துறை அமைச்சகத்தின் செயலாளராக செயல்பட்டுவருகிறார். அஜய் குமார் பல்லா, கடந்த 2024ஆம் ஆண்டு மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டு, அம்மாநில ஆளுநராக செயல்பட்டுவருகிறார்.





