--- --:--:-- --

திருச்சி மருத்துவமனையில் நர்சிங் மாணவி பலி..!

8

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது நர்சிங் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்களின் தவறான சிகிச்சையே இதற்குக் காரணம் எனக் குற்றம் சாட்டி, மாணவியின் குடும்பத்தினரும், செவிலியர்களும் மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, தொண்டைமாநல்லூர் அருகே உள்ள மணக்குடிபட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகளான சேட்டு – கலைச்செல்வி தம்பதியரின் மகள் சீதாலட்சுமி (20). இவர் திருச்சி அரசு மருத்துவமனையில் மூன்றாம் ஆண்டு செவிலியர் (Nursing) படிப்பு படித்து வந்தார். இவருக்கு மூக்கில் சதை வளர்ச்சி (Nasal Polyps) இருந்ததால், அதற்கான சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

 

 

இதனையடுத்து நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, மயக்கவியல் மருத்துவர் (Anaesthetist) அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து கொடுத்ததால், அறுவை சிகிச்சைக்குப் பின் மாணவிக்கு நினைவு திரும்பாமல் அவர் பரிதாபமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மருத்துவர்களின் தவறான சிகிச்சையால்தான் சீதாலட்சுமி உயிரிழந்தார் எனக் குற்றம் சாட்டி, அவரது உறவினர்களும், சக செவிலியர் மாணவிகளும் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு வெளியே சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்குப் பெருமளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். “மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவமனை முதல்வர் (Dean) நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” எனப் போராட்டக்காரர்கள் பிடிவாதமாக இருந்ததால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. முன்னதாக, திருச்சியில் உள்ள முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக வந்திருந்த தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் துணை சபாநாயகர் ரவிக்குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் நேரடியாகச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

 

திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன், துணை சபாநாயகர் ரவிக்குமார் மற்றும் அமைச்சர் ரமேஷ் ஆகியோர் நடத்திய தொடர் பேச்சுவார்த்தையின் இறுதியில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. பயிற்சி செவிலியர் சீதாலட்சுமியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் அடங்கிய தனிக் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் பாஸ்கர் தலைமையிலான இந்தக் குழு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு நேரடியாக வந்து ஆய்வு செய்து தங்களுக்கு அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது.

 

 

இந்த உத்தரவை எடுத்துக்கூறி, விசாரணை நேர்மையாக நடக்கும் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து, போராட்டத்தைக் கைவிடுமாறு அதிகாரிகள் மற்றும் அமைச்சர் தரப்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Right Menu Icon