--- --:--:-- --

தமிழ்நாட்டின் பெயரை தட்சிண பிரதேசம் என மாற்றுவதற்கு கூட தயங்க மாட்டார்கள் – முதல்வர் ஸ்டாலின்

2

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டின் பெயரை தட்சிண பிரதேசம் என மாற்றுவதற்கு கூட தயங்க மாட்டார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திருவாரூரில் தனது பரப்புரையை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து திருச்சி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட காந்தி மார்க்கெட், பாலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் நடைபயிற்சி மேற்கொண்டபடி வாக்கு சேகரித்தார். அப்போது, பாலக்கரையில் உள்ள டீக்கடை ஒன்றில் தேநீர் அருந்திய மு.க.ஸ்டாலின், திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜூக்கு ஆதரவு திரட்டினார்.

 

இதனை தொடர்ந்து, திருச்சி உழவர் சந்தை பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம், மணப்பாறை, முசிறி, துறையூர் ஆகிய தொகுதிகளின் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இல்லத்தரசிகளுக்கு வழங்கப்பட உள்ள 8 ஆயிரம் ரூபாய் கூப்பனை பயன்படுத்தி, மகளிர் தங்கள் இருப்பிடம் அருகே உள்ள தங்களுக்கு விருப்பமான கடையில் விருப்பமான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என விளக்கம் அளித்தார்.

 

தொடர்ந்து பேசிய அவர், பாஜக ஆளும் மாநிலங்களைப் போன்று தமிழ்நாட்டில் மதக் கலவரங்கள் இல்லை என்று பெருமிதத்துடன் கூறினார். தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியால், பாஜகவின் திட்டங்களை பட்டியலிட முடிந்ததா என்று முதலமைச்சர் வினவினார். சிறுபான்மையினருக்கு துரோகம் செய்தவர் ஈபிஎஸ் என்றும், அதற்கு துணை போனவர் அன்புமணி என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மேலும், தேசிய கூட்டணிக்கு அதிமுக தலைமை என்றால், கூட்டணி கட்சியினர் டெல்லி சென்றது ஏன் என்றும் முதலமைச்சர் வினவினார்.

Leave a Reply

Right Menu Icon