வேலூர் பூனையால் ஏற்பட்ட மின்சார தடை!
துணைநிலை உயர் மின் அழுத்த கம்பியில் பூனை சிக்கி இறந்ததால் மின்சாரம் தடைபட்டு வேலூர் மாநகரம் முழுவதும் சுமார் 4 மணி நேரம் இருளில் மூழ்கியது. வேலூர் மாநகர பகுதிக்கு செம்பாக்கத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
நேற்று இரவு சுமார் 8 மணியளவில் துணை மின்நிலையத்தில் மின் சாரத்தை உள்வாங்கி அனுப்பும் பகுதியில் உள்ள உயர் மின் அழுத்த கம்பிகள் செல்லும் பாதையில் இரண்டு பூனைகள் சண்டையிட்டதால் ஒரு பூனை உயர்மின் அழுத்த கம்பியில் சிக்கி கருகி உயிரிழந்தது. இதன் காரணமாக இயந்திரம் பழுதடைந்ததால் திருவலம் பவரி உள்ளிட்ட இடங்களில் பழுது ஏற்பட்டுள்ளது.
இதனால் வேலூர் மாநகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது. தகவலறிந்து வந்த மின்சாரத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என 60-க்கும் மேற்பட்டோர் 4 மணி நேரம் போராடி படிப்படியாக பழுதை சரி செய்தார்கள். இதனையடுத்து நள்ளிரவு பன்னிரண்டு முப்பது மணி அளவில் வேலூர் மாநகர் முழுவதும் மீண்டும் மின்சாரம் விநியோகம் சீரானது.







