மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் காலமானார்!!
மத்திய உணவு பாதுகாப்பு துறை அமைச்சரும், பீகாரில் லோக் ஐனசக்தி கட்சியின் தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் (வயது 74) காலமானார்.
பீகாரில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக அரசியலில் மாபெரும் சக்தியாக திகழ்ந்த, தலித் தலைவரான பஸ்வான், சில நாட்களுக்கு முன் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் பிரதான கட்சியான லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், மத்திய பாஜக கூட்டணி அமைச்சரவையில் உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்தார்.
1946-ல் பீகாரின் ககாரியா மாவட்டத்தில் பிறந்த ராம்விலாஸ் பஸ்வான், இளம் வயதிலேயே அரசியலில் காலடி வைத்து எம்எல்ஏவானவர். அதன் பின் ஹாஜிபூர் மக்களவை தொகுதியில் 8 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1977-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட பஸ்வான், நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாகத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.
கடந்த 2000-ம் ஆண்டு லோக் ஜனசக்தி கட்சியை துவக்கி தற்போது வரை அதன் தலைவராக இருந்து வந்தார். தற்போது ராஜ்யசபா எம்.பி.யாக உள்ள பஸ்வான் மோடி அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக இருந்து வந்தார்.
அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
கடந்த சில காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த பஸ்வானுக்கு சில நாட்களுக்கு முன்னர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.இந்நிலையில் இன்று மாலை திடீரென அவர் காலமானதாக அவரது மகன் சிராக் பஸ்வான் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ராம்விலாஸ் பஸ்வான் மறைவு அவரது கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது லோக் ஜனசக்தி கட்சியின் செயல் தலைவராக உள்ள பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான், இந்தத் தேர்தலில் பாஜக – ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளார்.
பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு எதிராக அவருடைய கட்சி நிற்கும் அனைத்து தொகுதிகளிலும் லோக் ஜனசக்தி கட்சி போட்டியிடும் என சிராக் பஸ்வான் அறிவித்திருந்தார், இந்நிலையில் ராம்விலாஸ் பஸ்வானின் மறைவு பீகார் தேர்தலில் பெரும் தாக்கத்தையும், அனுதாபத்தையும் ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.







