--- --:--:-- --

திருவாடனை வேட்பாளர் இவரா? அதிமுகவில் இணைந்த பிரபலம்! பரபரக்கும் சட்டசபை தேர்தல் களம்

2

ட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவியும், தவெக முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனாவின் மாமியாருமான லீமா ரோஸ், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். வரும் தேர்தலில், திருவாடனை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துவிட்டதற்கனா அறிகுறிகளாக, அரசியல் அரங்கில் பல அதிர்வலைகள் உண்டாகி வருகிறது. அதில் ஒன்று, ஒரு பிரபலக் குடும்பத்தின் அசுர அரசியல் நகர்வை சொல்லலாம். அது வேறு யாருமல்ல; ஒரு காலத்தில் ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஆட்டிப் படைத்த லாட்டரி அதிபர் மார்ட்டின் குடும்பம்தான்.
மார்ட்டினின் மனைவியும், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனாவின் மாமியாருமான லீமா ரோஸ், திடீரென அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கட்சியில் இணைந்ததுதான் இப்போதைய ஹாட் டாபிக். வெறும் கட்சித் தாவல் என்று இதைக் கடந்து செல்ல முடியாது. ஏனென்றால், இந்தத் தாவலின் பின்னணியில் இருப்பது ஒரு முழு நீள ‘திருவாடானை ஸ்கெட்ச்’ மற்றும் தென் மண்டல அரசியல் வியூகம் தான்.

பழிவாங்கல் அரசியலும், பக்குவப்பட்ட லீமா ரோஸும்!

லீமா ரோஸ் அரசியல் பின்னணி மிகவும் சுவாரஸ்யமானது. ஒரு காலத்தில் தி.மு.க.வுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் லாட்டரி அதிபர் மார்ட்டின். இதனால் அ.தி.மு.க. எரிச்சல் அடைந்தது. பின்னர் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் பல வழக்குகள், கைதுகள், குண்டர் சட்டங்கள் எனப் பெரும் துன்பத்தைச் சந்தித்தார். அந்த இக்கட்டான நேரத்தில், தனது கணவரைக் காக்கப் போராடிய லீமா ரோஸ், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து முறையிடப் போவதாகவும், மார்ட்டினை விடுவிக்க அ.தி.மு.க.வினரும் போலீஸாரும் கோடிக்கணக்கில் பேரம் பேசுகிறார்கள் என்றும் பகிரங்கமாகப் புகார் எழுப்பி அரசியல் அரங்கையே அதிரவிட்டார்.
அதிமுகவின் பழிவாங்கல் அரசியலுக்கு எதிராக ஒருகாலத்தில் போர்க்கொடி தூக்கிய லீமாரோஸ், இன்று அதே அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் கரத்தைப் பற்றியிருப்பது காலத்தின் கட்டாயம் அல்ல, மாறாக, அவரது அரசியல் அனுபவத்தை காட்டுகிறது.
அரசியல் பின்னணி இல்லாத லீமாரோஸ், 2013-ஆம் ஆண்டில் எஸ்.ஆர்.எம். பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சியில் (ஐ.ஜே.கே.) இணைந்து மாநிலப் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்தவர். இப்போது ஐ.ஜே.கே-விலிருந்து விலகி, அ.தி.மு.க.வில் ஐக்கியமாகி இருக்கிறார்.

ஒரே குடும்பம், மூன்று கட்சிகள்

லீமா ரோஸ் அ.தி.மு.க.வில் இணைந்ததன் பின்னணியில், அந்த லாட்டரி அதிபரின் குடும்பம் போடும் ஒரு மும்முனை அரசியல் சதுரங்க ஆட்டமும் இருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
மாமியார் லீமா ரோஸ், அ.தி.மு.க.வில் இணைந்து, சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானைத் தொகுதியில் வேட்பாளராகக் களம் காண, காய்களை நகர்த்தி வருகிறார்.  மருமகன் ஆதவ் அர்ஜுனா, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் தேர்தல் மேலாண்மைப் பொதுச் செயலாளராகப் பலமான இடத்தில் இருக்கிறார்.
மகன் சார்லஸ் மார்ட்டின், அண்மையில் புதுச்சேரியில் “லட்சிய ஜனநாயக கட்சி” என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். ஒரே குடும்பம், மூன்று கட்சிகளில் முக்கியப் பதவிகள். இது எதேச்சையானதா, அல்லது தென் மண்டல அரசியல் செல்வாக்கை, அதிகார மையங்களைப் பயன்படுத்திப் பலப்படுத்திக் கொள்ளும் திட்டமிட்ட உத்தியா? அ.தி.மு.க.வும் த.வெ.க.வும் எதிர்காலத்தில் ஏதேனும் மறைமுகத் தேர்தல் புரிதலுக்காக அடித்தளம் போடுகிறார்களா என்ற கேள்வியையும் இது எழுப்பியுள்ளது.

எடப்பாடியாரின் ‘திருவாடானை ஸ்கெட்ச்’

 

லீமா ரோஸின் வருகை, தென் தமிழகத்தில், குறிப்பாக ராமநாதபுரம் பகுதியில் அ.தி.மு.க.வின் செல்வாக்கை வலுப்படுத்த எடப்பாடி பழனிசாமி வகுத்த வியூகத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை, எப்போதும் எளிதில் கைப்பற்ற முடியாத ‘கை’யான காங்கிரஸின் வசம் இருந்து வருகிறது.
தன் சொந்த ஊர் அருகில் உள்ள தொகுதியில் வேட்பாளராகக் களம் காண வேண்டும் என்ற ‘அன்பான கோரிக்கையை’ லீமா ரோஸ் முன்வைக்க, எடப்பாடியாரும் அதற்குச் சம்மதம் தெரிவித்து, லாட்டரி அதிபரின் குடும்ப அரசியல் பலத்தையும், நிதியாதாரத்தையும், தென் மண்டல செல்வாக்கையும் அ.தி.மு.க.வுக்குள் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறார் என்று பேசப்படுகிறது.
லீமா ரோஸை நிறுத்தினால், தென் மண்டலத்தில் ஆளுங்கட்சிக்கு எதிராக வலுவான ஒரு வேட்பாளர் கிடைக்க வாய்ப்புள்ளது. அ.தி.மு.க. வேட்பாளராக அவரை நிறுத்துவது குறித்து எடப்பாடி பழனிசாமி தீவிரமாக யோசித்து வருவதாகவும், ஓரிரு வாரங்களில் இதற்கான இறுதி முடிவு வெளிவரும் என்றும் கோட்டை வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.
ஆனால், லாட்டரி அதிபர் மார்ட்டின் குடும்பத்தின் அரசியல் நகர்வுகள் இனி அ.தி.மு.க.வைச் சார்ந்து இருக்கும் என்பது உறுதியாகிவிட்டது. திருவாடானை களத்தில், ஒருகாலத்தில் தனக்கு எதிராகக் கிளம்பிய புகார்களை எல்லாம் கடந்து, அதே கட்சியில் லீமா ரோஸ் வேட்பாளராகக் களம் இறக்கப்படுவாரா? எடப்பாடியாரின் திட்டம் என்ன என்பதே இப்போதுள்ள கேள்வி! ஓரிரு வாரங்களில் இதற்கான விடை கிடைத்துவிடும்.
Right Menu Icon