திருப்பூரில் ஏடிஎம் கொள்ளை வழக்கில் வட மாநில கொள்ளையர்கள் 6 பேர் கைது
திருப்பூர் கூலிபாளையம் பகுதியில் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை அடியோடு பெயர்த்து எடுத்துச் சென்று கொள்ளையடித்த வழக்கில் வடமாநில இளைஞர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சாலையில், பேங்க் ஆப் பரோடா வங்கியின் ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வந்தது. கடந்த 22ஆம் தேதி இரவு, ஆள் நடமாட்டம் இல்லா நேரம் பார்த்து, ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்த முகமூடி அணிந்த கும்பல், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றது.
ஆனால், அவர்கள் திட்டம் பலிக்கவில்லை; ஏடிஎம் இயந்திரம் உடைப்பது கொள்ளை கும்பலுக்கு மிகவும் கடினமாக இருந்துள்ளது. எனினும், கொள்ளை திட்டத்தை கைவிடவும் அந்த அந்த கும்பலுக்கு மனமில்லை; இதையடுத்து அவர்கள் ஏடிஎம் இயந்திரத்தையே பெயர்த்து எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீஸார் சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை பிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கினர். இதனிடையே, ஏடிஎம் இயந்திரத்தை எடுத்துச்சென்ற கார் மட்டும்பெருந்துறை விஜயமங்கலம்அருகே கண்டறியப்பட்டது. ஈங்கூரைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரது காரைத் திருடிய கும்பல்,அதனைக் கொண்டு ஏடிஎம் இயந்திரத்தைக் கடத்தி கொள்ளையடித்துள்ளது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.
மேலும், பெருந்துறை அருகே சரளை என்ற இடத்தில், உடைக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரத்தை போலீஸார் கண்டு பிடித்தனர். தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 300 மீட்டர் தொலைவில், காலி நிலத்தில் உடைக்கப்பட்டு, சிதறிக்கிடந்த ஏடிஎம் இயந்திர பாகங்களை மீட்டு, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், கூலிப்பாளையம் ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளை வழக்கில், வடமாநில இளைஞர்கள் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்த முழு விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




