தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் புதுச்சேரி காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு அரபிக்கடல், மத்திய மேற்கு அரபிக்கடல், தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
குளச்சல் முதல் கன்னியாகுமரி வரை கடல் அலைகள் மூன்று மீட்டர் அளவிற்கு மேலாக எழக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கோவை மாவட்டத்தின் சின்னக்கல்லார், வால்பாறையில் 3 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.






