மாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் சட்டம் பாயும்…!
சென்னையில் மாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் சட்டம் பாயும் என மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார் . ஆனால் காவல்துறையினர் எச்சரிக்கைக்கு செவிசாய்க்காமல் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் மாஞ்சா நூலில் பட்டம் விடுவதைக் காண முடிகின்றது.
மஞ்சள், கண்ணாடி தூள் உள்ளிட்டவற்றை சேர்த்து நைலான் கயிற்றால் தயாரிக்கப்படுவதுதான் மாஞ்சா நூல். இந்த கயிறு மிக கடினமாக இருக்குமென்பதால் மற்றொரு மாஞ்சா நூலை கூட அறுக்கும் திறன் படைத்தது. எனவே பட்டம் விடும் போது மற்றவர்களின் பட்டங்களை வீழ்த்துவதற்கு இந்த நூலை மக்கள் பயன்படுத்த தொடங்கினர்.
ஆனால் மாஞ்சா மனிதனின் கழுத்தையும் கிழிக்கும் திறன் கொண்டது. மாஞ்சா பட்டம் விடும் போது மரக்கிளைகள், மின்சார கம்பிகளில் சிக்கிக்கொள்ள மாஞ்சா மனிதனின் கழுத்தை அறுத்த சம்பவங்கள் ஏராளமாக நடந்திருக்கின்றன. இதனால்தான் மாஞ்சா நூலில் பட்டம் விடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.
ஊரடங்கு காலத்தில் மக்கள் வீடுகளில் முடங்கியதால் மாலை வேளையில் பலரும் மாஞ்சா நூலில் பட்டம் விடுவது காணப்படுகிறது. எனவே காவல்துறையின் எச்சரிக்கையை மீறி சாலிகிராமம், கோயம்பேடு மற்றும் வட சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மாஞ்சா நூலில் இளைஞர்கள் பட்டம் விட்டனர்.
மாஞ்சா நூலில் விபரீதத்தை அறியாமல் விளையாடி வரும் மக்களை மனித உயிர்களின் மதிப்பை அறியாதவர்கள் என்று தான் கூறவேண்டும். எச்சரிக்கையை மீறி மாஞ்சா விடுபவர்கள் மீது காவல்துறை
தக்க நடவடிக்கை எடுக்கும் என நம்பலாம்.






