கழிவறையில் கைதிகள் வழுக்கி விழும் சம்பவம்! மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!
காவல் நிலைய கழிவறையில் கைதிகள் வழுக்கி விழும் சம்பவங்கள் தொடர்பாக சென்னை காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை காவல் துறைக்கு உட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு காவல் நிலையம் செல்லும் கைதிகளுக்கு கை, கால்கள் உடைவது தொடர் கதையாகி வருகிறது. கழிவறைகளில் வழுக்கி விழுந்தனாலேயே கை, கால்கள் உடைந்ததாக காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் கைதிகள் கழிவறையில் வழுக்கி விழும் சம்பவங்கள் எத்தனை நடைபெற்றுள்ளன? கைதிகளைப் போல் போலீசாரும் வழுக்கி விழுந்த சம்பவங்கள் ஏதேனும் நடைபெற்றுள்ளனவா? என மனித உரிமைகள் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் கழிவறைகளை முழுமையாக பராமரிக்காத அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து இரண்டு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை காவல் ஆணையர் உத்தரவிடப்பட்டுள்ளது.






