மே 4-ல் விசில் சத்தம் கேட்கும் : எஸ்.ஏ. சந்திரசேகர் வீடியோ
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், அவரது தந்தை மற்றும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் உணர்ச்சிகரமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்ட அவர், 2026-ம் ஆண்டு அந்த மாற்றத்திற்கான ஆண்டாக அமையும் என்று உறுதியளித்தார்.
தற்போதைய அரசியல் சூழலில், அந்த மாற்றத்தை முன்னெடுத்துச் செல்லும் தகுதி விஜய்க்கு மட்டுமே இருப்பதாக அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார். தமிழகத்தின் எதிர்கால நலனை மட்டுமே கருத்தில் கொண்டு, பல தடைகளையும் சவால்களையும் தாண்டி விஜய் ஒரு சாதாரணத் தொண்டனாக களத்தில் இறங்கிப் போராடி வருகிறார் என மகனின் உழைப்பைப் பாராட்டியுள்ளார். இந்தத் தேர்தல் மற்ற தேர்தல்களைப் போல சாதாரணமாக இருக்காது என்று குறிப்பிட்ட எஸ்.ஏ.சந்திரசேகர், இது மௌனப் புரட்சியாக இருக்கும் என்றார். கத்தி இன்றி, ரத்தம் இன்றி மக்கள் தங்கள் வாக்குகளின் மூலம் இந்த புரட்சியை நிகழ்த்துவார்கள். த.வெ.க-வின் ‘விசில்’ சின்னத்திற்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
தேர்தல் முடிவுகள் குறித்து அவர் பேசுகையில், விசில் சின்னத்திலே நீங்க தட்டுகின்ற ஒவ்வொரு வாக்கும், வரும் மே மாதம் 4-ஆம் தேதி தமிழகம் முழுவதும் விசில் சத்தமாக எதிரொலிக்க வேண்டும். அன்று விஜய் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவார் என்பது உறுதி எனத் தெரிவித்தார். இறுதியாக, விஜய்யின் இந்தப் புதிய அரசியல் பயணம் வெற்றிபெற தமிழக மக்கள் அனைவரும் தங்களது முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் அந்த வீடியோவில் உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.






