ரூபாய் நோட்டுக்களை கலர் ஜெராக்ஸ் எடுத்து வைத்திருந்த நபர்..!
ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட முயன்றவர் போலீசாரின் வாகன தணிக்கையில் சிக்கிக் கொண்ட சம்பவம் திருப்பூரில் அரங்கேறியுள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த பகுதியில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது பதிவு எண் இல்லாமல் வந்த இருசக்கர வாகனம் ஒன்று போலீசார் சைகை கொடுத்தும் நிறுத்தாமல் சென்றுள்ளது. உடனடியாக விரைந்த போலீசார் அந்த இருசக்கர வாகனத்தில் சென்று அவரை மடக்கிப் பிடித்து விசாரித்துள்ளனர்.
முன்னுக்குப் பின் முரணாகப் பேசியவரிடம் வாகனத்தின் சான்றிதழ்களை போலீசார் கேட்க இல்லை என கூறியுள்ளார். உடனடியாக நபரிடம் இருந்த பையை போலீசார் சோதனை செய்துள்ளனர். 2000, 500, 200, 100 ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளன.
மேலும் அந்த நபரிடம் நடத்தப்பட்ட சோதனையில் மற்றொரு கையில் ஒரு பேப்பரில் 2000 ரூபாய் நோட்டுகள் கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்டு அவை கட் செய்யப்படாமல் இருந்தது தெரிய வந்தது. அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த நபரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அதில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் கும்பகோணம் கள்ளுக்கடை சந்தை பகுதியை சேர்ந்த கண்ணன் என்பதும் ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்டதும் தெரியவந்ததையடுத்து கண்ணனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.






