தங்கையுடன் கொழுந்தனுக்கு ஏற்பட்ட ஒருதலை காதல்..சமாதானம் பேசிய மாமியாரை போட்டுத்தள்ளிய மருமகள்! திருப்பூரில் நடந்த பகீர் சம்பவம்!!
திருப்பூர் அவிநாசி ரோடு, திலகர்நகர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி மயங்காத்தாள் (65). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் ராமசாமி இரண்டாவதாக சகுந்தலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு கார்த்திக், சரவணக்குமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.சமீபத்தில் சகுந்தலா இறந்துவிட்டார்.
இதையடுத்து ராமசாமி, மயங்காத்தாள் ஆகியோருடன் கார்த்திக், சரவணக்குமார் ஆகியோர் வசித்து வந்தனர். இந்நிலையில் கார்த்திக் மனைவி பிரியங்காவின் தங்கையை, கொழுந்தன் சரவணக்குமார் காதலித்து வந்துள்ளார். இதற்கு பிரியங்காவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இரண்டு குடும்பத்திற்குள்ளும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுவந்துள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரியங்காவின் தந்தை அன்பழகன், சகோதரர் சுஷாந்த், உறவினர் ஸ்ரீராம் ஆகியோர் ராமசாமி வீட்டிற்கு வந்தனர்.
கொலைவெறி…
அங்கு மயங்காத்தாளுடன் சரவணகுமார் காதல் விவகாரம் குறித்து பேச்சு நடத்தினர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடங்காத பிரியங்கா, அவரது தந்தை, சகோதரர், மற்றும் உறவினர் ஒருவர் உட்பட 4 பேரும் சேர்ந்து மயங்காத்தாவை கொலைவெறியோடு கீழே தள்ளியதாக தெரிகிறது. இதில் சுவற்றின் மீது தலை மோதியதில் மயங்காத்தாள் பலத்த காயமடைந்து மயக்கமடைந்தார்.
அதிர்ச்சியடைந்த பிரியங்கா உள்ளிட்ட நால்வரும் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மயங்காத்தாள் இறந்து விட்டதாக பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 15-வேலம்பாளையம் போலீசார் 4 பேர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






