இஎம்ஐ செலுத்த 2 ஆண்டுகள் வரை கால அவகாசத்தை நீட்டிக்க முடியும்…!
கொரொனா அச்சுறுத்தல் காரணமாக வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய இஎம்ஐ எனும் மாத தவணையை செலுத்த இரண்டு ஆண்டுகள் வரை தங்களால் கால அவகாசம் வழங்க முடியும் என்று மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரொனா பொது முடக்க காலத்தில் இஎம்ஐ எனப்படும் மாத கடன் செலுத்துவதற்காக ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த விலக்கினை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் அவர்கள் செலுத்த வேண்டிய வட்டிக்கு வட்டி சேர்த்து செலுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.
இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதி அருண்மிஸ்ரா தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.
அப்போது வங்கி கடன் விவகாரங்களில் வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் விஷயத்தில் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் முடிவு சார்ந்தது என மத்திய அரசு கூறி தப்பித்துக் கொள்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
மேலும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் இத்தகைய விவகாரங்களில் மத்திய அரசு தலையிட முடியும் என்றும், வங்கிகள் வட்டி வசூல் செய்வதை தடுக்க முடியும் என்றும் நாங்கள் நினைவூட்ட விரும்புகிறோம் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி சார்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் இந்த மாதத் தவணை செலுத்த இரண்டு வருடங்கள் வரை தங்களால் விளக்கு அளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடுமையான பிரச்சினையை சந்தித்து வரும் துறைகளை தனித்தனியாக கண்டறிந்து அவற்றை அந்த பிரச்சனையிலிருந்து மீண்டு வரக்கூடிய பணிகளை செய்யும் வழிகளை கண்டறிந்து வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நாளைய தினம் இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக விசாரிக்கப்பட்டு முடிவு செய்யப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இஎம்ஐ செலுத்த 2 ஆண்டுகள் வரை கால அவகாசத்தை நீட்டிக்க முடியும்…!






