முருகன் கோயில்களில் தைப்பூசம் கோலாகல கொண்டாட்டம்
தை மாதத்தில் பவுர்ணமியுடன் பூச நட்சத்திரம் சேரும் நாளே தைப்பூசத் திருநாளாகும். உலகில் முதலில் நீரும். அதிலிருந்து உயிர்களும் தோன்றியதாகவும் இவை நடைபெற்ற நாள்தான் தைப்பூச நாள் என்றும் புராணங்கள் கூறுகின்றன. தைப்பூசத்தன்றுதான் வள்ளியை முருகன் மணம் புரிந்து கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது.
இத்திருநாள் முருகன் அருளும் எல்லா திருத்தலங்களிலும் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகின்றன. அந்த வகையில் பக்தர்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறது திருச்செந்தூர் கடற்கரை. அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு உதய மார்த்தாண்ட தரிசனம் நடைபெற்றது முதல் பல்லாயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
சாதாரண தரிசனத்திற்கு 8 மணி நேரமும், 100 ரூபாய் கட்டண தரிசனத்தில் 4 மணி நேரமும் காத்திருக்கும் நிலை உள்ளது. திருச்செந்தூர் வரும் வாகனங்கள் 4 கிலோ மீட்டருக்கு முன்பே நிறுத்தப்படுகின்றன. பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும் பல்லாயிரம் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
பழனி கோயிலில் தைப்பூச விழாவையொட்டி காவடியுடன் படிப்பாதையில் ஏறி பல்லாயிரம் பேர் நேர்த்திக் கடன் செய்து வருகின்றனர். பவுர்ணமி தினத்தில் சூரியனை நமஸ்காரம் செய்வது விஷேசம் என்பதால் அதிகாலை 4 மணி முதலே திருஆவினன்குடி மற்றும் சண்முகநதியில் புனித நீராடிவிட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
சென்னை வடபழனி முருகன் கோயிலில் நேற்றிரவு பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து தங்கிய மக்கள் அதிகாலை முதலே தரிசனம் செய்து வருகின்றனர். முதியவர்கள், குழந்தைகளுடன் வருபவர்களுக்கு தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது.





