கொரோனாவால் தாய்லாந்தில் புகழ்பெற்ற தண்ணீர் திருவிழாவுக்கு தடை
தாய்லாந்தில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் தண்ணீர் திருவிழா கொரொனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இந்த நேரம் விழாக்கோலம் பூண்டிருக்கும் பாங்காங் வீதிகள் பேரமைதியில் ஆழ்ந்துள்ளது. காணுமிடமெல்லாம் மனித தலைகளாக கூட்டமாக காட்சியளித்த இந்த இடம் இன்று வெறிச்சோடி காணப்படுகிறது.
தண்ணீரை பீச்சி எடுத்து உற்சாகத்துடன் நடனமாடும் மக்கள் இன்று வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். கையில் தண்ணீர் துப்பாக்கிகளுடன் அலைந்த மக்கள் இன்று வாயில் முக கவசத்துடன் அலைகின்றனர். இவை அனைத்திற்கும் காரணம் கண்ணுக்குத் தெரியாத கொரொனா வைரஸ். தாய்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஏப்ரல் 13-ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை தண்ணீர் திருவிழா கொண்டாடப்படும்.

இந்த திருவிழாவால் வாழ்வு செழிக்கும் என்று தாய்லாந்து மக்கள் நம்புகின்றனர். சுங்காரன் என அழைக்கப்படும் இந்த திருவிழாவில் ஒருவர் மீது ஒருவர் தண்ணீரை பீச்சி அடித்து உற்சாகமாகக் கொண்டாடுவர்.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தாய்லாந்திற்கு படையெடுப்பர். ஆனால் இந்த ஆண்டு வேலைக்காக வேறு நாடுகளுக்கு சென்று தாய்லாந்து மக்களை புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்க சொந்த நாட்டுக்கு வர முடியாத சூழல் உருவாகியுள்ளது.







