--- --:--:-- --

தென்காசி : பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து

4

தென்காசி அருகே படுவேகமாகச் சென்ற தனியார் பேருந்து, எதிரே வந்த பேருந்து மீது மோதியதில் ஐந்து பெண்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.  தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் தனியார் பேருந்துகள் அதிகளவில் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட நேரத்தில் இயக்க வேண்டும்… அதிக பயணிகளை ஏற்ற வேண்டும்… போன்ற கட்டளைகளோடு தனியார் பேருந்து ஊழியர்கள் பணிபுரியும் சூழலில், பேருந்துகளைக் கட்டுப்பாடு இல்லாத வேகத்தில் இயக்குவது வாடிக்கையாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

 

இந்நிலையில், தென்காசி பேருந்து நிலையத்தில் இருந்து கோவில்பட்டிக்கு எம்.ஆர்.கோபாலன் என்ற தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. எதிர்த்திசையில் ராஜபாளையத்தில் இருந்து சங்கரன்கோவில் வழியாக தென்காசிக்கு கே.எஸ்.ஆர். என்ற தனியார் பேருந்து வந்துகொண்டிருந்தது.

கே.எஸ்.ஆர். பேருந்து அதிவேகத்தில் இயக்கப்பட்டதோடு, சாலையில் சென்ற வாகனங்களை அச்சுறுத்தும் வகையில் அதன் ஓட்டுநர் ஓவர்டேக் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடையநல்லூரைக் கடந்து துரைசாமியாபுரம் அருகில் உள்ள காமராஜர் நகர் பகுதிக்கு வந்த கே.எஸ்.ஆர். பேருந்து, முன்னே சென்ற வாகனத்தை படுவேகத்தில் முந்திச் செல்ல முயன்றது.

 

ஆனால், எதிர்த் திசையில் வந்த எம்.ஆர்.கோபாலன் பேருந்து மீது வந்தவேகத்தில் படு பயங்கரமாக மோதியது. இதில் இரண்டு பேருந்துகளின் முகப்புகளும் அப்பளம்போல நொறுங்கின. இரு பேருந்துகளிலும் சேர்த்து 90-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த நிலையில், விபத்தில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் அலறினர். ஐந்து பெண்கள் உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த பேருந்துகளுக்கு பின்னால் வந்த வாகனங்களும் விபத்தில் சிக்கின.

 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பேருந்து இடிபாடுகளை அகற்றி காயம் அடைந்தவர்களை மீட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் ஆம்புலன்ஸ்கள் உதவியுடன் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய 10-க்கும் மேற்பட்டோர் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

மேலும், நான்கு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளனர். இரு ஓட்டுநர்களும் லேசான காயங்களுடன் தப்பினர். கே.எஸ்.ஆர். பேருந்து விபத்தில் சிக்குவது இது முதல்முறையல்ல… கடந்த ஆண்டு இதே வழித்தடத்தில் விபத்தை ஏற்படுத்தி, மூன்று பேரின் உயிரை பலி வாங்கியது. இந்நிலையில், தனியார் பேருந்துகள் அதிவேகத்தில் இயக்கப்படுவதே விபத்திற்கான காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களுக்கு நேரில் ஆறுதல் கூறிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அதிவேகமாக இயக்கப்படும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகக் கூறினார். இனியாவது தனியார் பேருந்து பயணம் உயிரை பலி வாங்கும் பயணமாக இல்லாமல், பாதுகாப்பான பயணமாக அமைய வேண்டும் என்பதே பொதுமக்களின் எண்ணமாக உள்ளது.

Right Menu Icon