--- --:--:-- --

இன்றும் வெப்பம் அதிகரிக்கும் – வானிலை மையம்

3

மிழ்நாட்டில் நேற்று வெயில் கொளுத்தினாலும், பல்வேறு இடங்களில் மழை பெய்தது. தமிழ்நாட்டில் நேற்று 5 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக, கரூர் பரமத்தியில் 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. அதற்கு அடுத்தப்படியாக வேலூரில் 102.02 டிகிரியும், ஈரோட்டில் 101.48 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளது.

 

அதேபோல், சேலத்தில் 100.76 டிகிரி மற்றும் திருச்சியில் 100.58 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனிடையே, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்தது. இதன் காரணமாக, வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

மேலும், நெல்லை மாவட்டம் தச்சநல்லூர், கரையிருப்பு, ராமையன்பட்டி, பாளையங்கோட்டை தாழையூத்து, அழகனேரி, தாதனூத்து உள்ளிட்ட இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்தது.இந்நிலையில், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

ஆகையால், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்றும் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

 

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

Right Menu Icon