ஸ்டாலினுக்கு தூக்கம் போய்விட்டது..! சேலம் கூட்டத்தில் விஜய் அதிரடி பேச்சு!
தமிழகத்தில் தினமும் ஒரு கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கு பற்றி எதிர்க்கட்சிகள் கையெடுத்து வரும் நிலையில், சேலம் கூட்டத்தில் விஜய் , முதல்வர் ஸ்டாலினை கடுமையாக சாடினார். சேலம் மண்ணில் விஜய் தெறிக்கவிட்ட வார்த்தை வீச்சுகள் ஆளுங்கட்சியின் நிம்மதியைக் குலைத்திருக்கின்றன. “யார் வீட்டு வாசலிலாவது போய் விஜய் நின்றிருக்கிறாரா?” என்று ஏளனம் செய்தவர்களுக்கு, சேலம் கூட்டத்தில் விஜய் கொடுத்த பதிலடி ஒவ்வொன்றும் அனல் பறக்கும் ரகம். “தமிழ்நாடு மற்றவர்களுக்கு மாநிலம், எனக்கு அது வீடு” என்று உணர்ச்சிகரமாகத் தொடங்கியவர், அடுத்த சில நிமிடங்களில் திராவிட மாடல் ஆட்சியைத் தூர்வாரத் தொடங்கினார்.
விஜய்யின் பேச்சில் முன்புபோல இல்லாத ஒரு ஆவேசம் தென்பட்டது. குறிப்பாக, காவல்துறையின் கட்டுப்பாடுகளை ‘SOP’ (Standard Operating Procedure) என்று சொல்லாமல், ‘Stalin Sir Operating Procedure’ என்று அவர் கிண்டலடித்தபோது கூட்டம் விண்ணதிரக் கத்தியது. “எந்த விஷயத்தில் நம்மை கிண்டல் செய்கிறார்களோ, அங்கிருந்துதான் நம் வலிமை தொடங்குகிறது. நம்மை குறைத்து மதிப்பிடும்போதுதான் நமக்கான தைரியம் பிறக்கிறது” என்று தொண்டர்களுக்கு உற்சாகம் தந்தார்.
தன் மீது சுமத்தப்படும் ‘அனுபவம் இல்லை’ என்கிற விமர்சனத்தைப் போட்டுப் பொளந்து தள்ளினார். “கொள்ளையடிக்கவும், அண்ணா – எம்.ஜி.ஆரை மறக்கவும் எனக்கு அனுபவம் இல்லைதான். ஆனால் காமராஜரும், எம்.ஜி.ஆரும் தந்த நல்லாட்சியைத் தர என்னிடம் அன்பான மனம் இருக்கிறது” என்று சிக்ஸர் அடித்தார்.

திமுக-வின் அனுபவ வாதத்திற்கு அவர் வைத்த ஆப்பு இன்னும் சுவாரஸ்யமானது. “மற்றவர் ஆரம்பித்த கட்சியில் அமர்ந்து கொண்டு ஆட்சி நடத்துபவர்களுக்கு, சுயமாக ஒரு கட்சி தொடங்கி ஒரு சதவீத ஓட்டு வாங்கும் தில் இருக்கிறதா?” என்று அவர் கேட்ட கேள்விக்கு அறிவாலயத்திடம் பதில் இருக்காது. இரண்டே ஆண்டுகளில் முப்பது சதவீத வாக்கு வங்கியைத் தவெக வைத்திருப்பதுதான் உண்மையான அனுபவம் என்று அதிரடியாகத் தெரிவித்தார். டெல்லிக்குத் தமிழ்நாடு ‘அவுட் ஆஃப் கண்ட்ரோல்’ என்று முதல்வர் ஸ்டாலின் சொல்வதை வழிமொழிந்த விஜய், தற்போது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, இளைஞர்கள் வேலைவாய்ப்பு என எல்லாமே அவுட் ஆஃப் கண்ட்ரோலில்தான் இருக்கிறது என்று புள்ளிவிவரங்களால் விளாசினார்.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு லட்சணத்தைச் சாடியவர், “இங்கே உருப்படியாக ஒரு டி.ஜி.பி கூட இல்லை. முதலில் ஒரு அதிகாரியைப் போடுங்கள் சார்” என்று முதல்வரைப் பார்த்துப் போட்டுத் தாக்கினார். ஆசிரியர்கள், செவிலியர்கள், விவசாயிகள் எனப் பல தரப்பினரும் தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக முதல்வர் பொய் சொல்கிறார் என்று சாடியவர், “பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே என்பார்கள். ஆனால் நீங்கள் புழுகர் பெருமானே!” என்று ஸ்டாலின் பாணியிலேயே அவருக்குப் பட்டம் சூட்டினார்.
தேர்தல் நேரத்துத் தந்திரங்கள் குறித்தும் தொண்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். “வண்டி வண்டியாகப் பணம் கொண்டு வருவார்கள். 1000, 2000 என்று கொட்டுவார்கள். அது உங்கள் பணம்தான், வாங்கிக்கொள்ளுங்கள். ஆனால் ஓட்டு மட்டும் விசில் சின்னத்திற்குத்தான். பணம் கொடுத்து ஓட்டு வாங்கிவிடலாம் என்று நினைப்பது இனி நடக்காது” என்று மக்களிடம் நீதி கேட்டார். விக்கிரவாண்டி மாநாட்டில் தான் வீசிய ‘கூட்டணி ஆட்சி’ என்ற அணுகுண்டு இப்போது பல கூட்டணிகளுக்குள் தாறுமாறாக வெடித்துக் கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய விஜய், “வரவிருக்கும் தேர்தல் மக்கள் விரும்பும் விஜய்க்கும், மக்கள் விரோத ஸ்டாலின் சாருக்குமான மோதல்” என்று போர்க்களத்தை உறுதிப்படுத்தினார்.

“ஒரு டி.என்.பி.எஸ்.சி தேர்வைக்கூட ஒழுங்காக நடத்தத் தெரியாத அரசு, உலக நாடுகளுடன் போட்டி போடுவதாகப் பேசுவது நகைப்புக்குரியது” என்று முத்தாய்ப்பாகப் பேசி முடித்தபோது, சேலம் மைதானம் ஒரு போர்க்களத்தைப் போலக் காட்சியளித்தது. கடைசியாக, “ஸ்டாலின் சாரை இனி என் போர் முழக்கம் தூங்கவிடாது… கதம் கதம்” என்று அவர் சொன்ன அந்த வார்த்தைகள், கோட்டையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் காய்ச்சலை வரவழைக்கும்.
சேல்ம கூட்டத்தில் விஜய்யின் இந்த அதிரடிப் பாய்ச்சல், 2026-ல் ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்கான தொடக்கப்புள்ளியாகவே பார்க்கப்படுகிறது.
பழி வாங்குகிறதா திமுக அரசு?
தவெக-வின் ‘வெயில்’ அரசியல்!

“யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே என்பார்கள். ஆனால், இங்கே தளபதி வரும் முன்னே கெடுபிடிகள் வரிசையாக வருகிறதே…” – இது சேலம் பொதுக்கூட்டத் திடலில் அனல் பறக்கும் வெயிலிலும், அதைவிட அதிக அனலோடு நின்றிருந்த தமிழக வெற்றிக் கழகத் தொண்டர் ஒருவரின் ஆதங்கக் குரல்!
கரூரில் 41 உயிர்கள் பறிபோன சம்பவத்தைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டது ஆளும் தரப்பு. ‘பாதுகாப்பு’ என்கிற ஒற்றை வார்த்தையை ஆயுதமாக ஏந்தி, விஜய்யின் அரசியல் நகர்வுகளுக்குச் செக் வைப்பதே வேலையாக இருக்கிறது என்கிறார்கள் தவெக நிர்வாகிகள். ஸ்டாலின், எடப்பாடி, அண்ணாமலை என மற்ற தலைவர்களின் கூட்டங்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கும் காவல்துறை, விஜய்க்கு மட்டும் ஏன் ‘முள் வேலி’ போடுகிறது என்பதுதான் தவெகவினரின் ஆதங்கம்.
“தளபதியைப் பார்க்க லட்சக்கணக்கில் கூட்டம் திரளும் என்பது ஆளும் தரப்புக்குத் தெரியும். அந்த பயம்தான் இப்போது கெடுபிடிகளாக உருமாறியிருக்கிறது. ஒரு லட்சம் பேருக்கு அனுமதி கேட்டால், கண்துடைப்பிற்காக ஐயாயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி கொடுக்கிறார்கள். 51 நிபந்தனைகளை போடுகிறார்கள்.
அதுவும் எப்போது தெரியுமா? உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை! நிழலுக்குப் பந்தல் போடக்கூட அனுமதி இல்லை. வெட்டவெளியில் தவெகவினர் வாட்டி வதைப்பதன் மூலம் கூட்டத்தைக் குறைக்கலாம் என கணக்குப் போடுகிறது ‘அறிவாலயம்’. ஆனால், வாடி வதங்குவது நம் மக்கள்தான் என்பதை கருணையோடு திமுக சிந்திக்க வேண்டும்.
ஆனால், ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளட்டும்… சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடாது. மைதானத்திற்குள் நுழைய விடாமல் தடுத்தாலும், காம்பவுண்டிற்கு வெளியே கடல் போலத் திரண்டு நிற்கும் இந்தத் தொண்டர் படைதான் 2026-ன் வெற்றியைத் தீர்மானிக்கும். எங்களை எவ்வளவு தூரம் அமுக்குகிறார்களோ, அவ்வளவு வேகத்தில் தளபதி மேலே வருவார்! இவ்வாறு அவர்கள் கூறினர்.
கெடுபிடிகள் ஒருபுறம், கோட்டை நோக்கிய விஜயின் வேகம் மறுபுறம் எனத் தமிழக அரசியல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கிவிட்டது.





