நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிக்க ஓரக் கசாயம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் வழங்கினர்!
சிவகங்கை மாவட்டம் நகர்ப்பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்புச்சக்தி உருவாக்கும் வகையிலான ஓரக் கசாயம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயகாந்தன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது .
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் சமூக ஆர்வலர் அயோத்தி அவர்கள் பொதுமக்களுக்கு ஓரக் கசாயம் மற்றும் பத்து கிராம் பாக்கெட் சுவாசப்பொடி ஆகியவற்றை வழங்கி தெரிவிக்கையில் , கொரோனா வைரஸ் பாதிப்பு அனைத்து இடங்களிலும் இருந்து வருவதால் இந்தக்கொடிய நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள பொது சுகாதாரத்துறை பல்வேறுகட்ட தடுப்புப்பணிகளை மேற்கொண்டு வருவதுடன் பொதுமக்களுக்கு தேவையான வழிகாட்டுதலையும் வழங்கி வருகிறது .

அந்தவகையில் மேலும் பொதுமக்களுக்கு நோய் தாக்காமல் இருக்க ஒவ்வொருவருக்கும் மிகமுக்கியமான ஒன்றான நோய் எதிர்ப்புச் சக்தி ஒவ்வொருவரின் உடம்பிலும் இருக்கும் வகையில் அதற்கேற்ப உணவுகளை உட்கொள்ள பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகின்றன . தொடர்ந்து சித்தா மருத்துவத்துறையின் மூலம் கபசுரக்குடிநீர் , நிலவேம்பு குடிநீர் அனைவருக்கும் வழங்கப்பட்டு வந்தநிலையில் தற்பொழுது ஓரக் கசாயம் மற்றும் சுவாசப்பொடி வழங்கப்படுகிறது .
ஓரக் கசாயம் ஒவ்வொருவரும் 10 எம்எல் வீதம் 3 நாள் பருக வேண்டும் . சுவாசப்பொடியை தொண்டைப்பகுதியில் வைத்து உமிழ்நீராகப் பருக வேண்டும் . உடம்பிலுள்ள சளி , இருமல் நீங்குவதுடன் ஒவ்வொருவருக்கும் நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிக்கும் . எனவே பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் வழங்கும் சித்தா மருத்துவத்துறையின் மருந்துகளை முழுமையாக பயன்படுத்தி நோய் எதிர்ப்புச்சக்தியை உருவாக்கி அனைவரும் ஆரோக்கியமாக இருந்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயகாந்தன் அவர்கள் தெரிவித்தார் .

பின்னர் இராசி இயற்கை உணவுகள் பயிற்சி மையம் மூலம் ரூ . 2 இலட்சம் மதிப்பீட்டில் 1000 நபர்களுக்கு வழங்கப்பட்ட ஓரக் கசாயம் மற்றும் சுவாசப்பொடியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார் இதில் காவல் ஆய்வாளர் மோகன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.







