--- --:--:-- --

பாலியல் துன்புறுத்தல் குறித்து பள்ளி மாணவிகள் ‘ஷாக்’ வீடியோ!

4

பொள்ளாச்சி அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொடர் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் ஏற்படுத்திய வடு மறைவதற்குள் மற்றுமொரு அதிர்ச்சிகர புகார் வெளியாகியுள்ளது.

 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு பத்தாம் வகுப்பு பயிலும் மாணவிகள் சிலர் கூறியுள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் சிலர் தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதாக மாணவிகள் அதிர்ச்சிகர குற்றச்சாட்டை கூறியுள்ளனர்.

 

ஆசிரியர்கள் குறித்து மாணவிகள் தெரிவித்த திடுக்கிடும் குற்றச்சாட்டுகள் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. பள்ளியில் பணியாற்றும் இசை ஆசிரியர், பள்ளி மாணவிகளிடம் தவறான நோக்கத்துடன் அணுகுவதாகவும், நடனப் பயிற்சி என்ற பெயரில் தவறான நோக்கத்தில் பாலியல் ரீதியாக அத்துமீறுவதாகவும், வரம்பு மீறி நடந்து கொள்வதாகவும் மாணவிகள் குற்றம்சாட்டினர்.

 

மேலும் இசை ஆசிரியர் மற்றும் தாவரவியல் ஆசிரியர் இருவரும் பள்ளிக்கு வரும்போது மதுபோதையில் வருவதாகவும், இதனால் பள்ளிக்கு வரவே அச்சமாக இருப்பதாகவும் தெரிவித்தனர். தாங்கள் எதிர்கொண்டு வரும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பள்ளி மாணவிகள் தற்போது வீடியோ பதிவு செய்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் முறையிட்டுள்ளனர்.

 

இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்தால் பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள் என்ற அச்சத்தில், வெளியில் சொல்லாமல் மன உளைச்சலில் இருந்து வந்ததாக மாணவிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஆசிரியர் மீது குற்றம்சாட்டினால் தங்களையே தண்டித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் கூட புகார் அளிக்கவில்லை என்றும் மாணவிகள் கூறியுள்ளனர்.

 

இதுகுறித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியை தேன்மொழியிடம் கேட்டபோது, இது குறித்து பள்ளி மாணவிகள் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை என்றும், பாலியல் குற்றச்சாட்டு குறித்து தான் எதுவும் அறிந்திருக்கவில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளியில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

பள்ளி ஆசிரியர்கள் மீது மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்திருப்பது பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, இசை ஆசிரியர் பாலியல் ரீதியான அத்துமீறலில் ஈடுபட்டதாக மாணவிகள் வீடியோ வெளியிட்டதை தொடர்ந்து நேற்று முழுவதும் பள்ளியில் உள்ள ஆசிரியர்களிடம் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் வீடியோ வெளியிட்ட மாணவியின் தாயை பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் நிலையத்தில் காலை 10 மணிக்கு விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என காவல்துறையினர் மாணவியின் தாய்க்கு சம்மன் கொடுக்கப்பட்டுள்ளனர்.

Right Menu Icon