--- --:--:-- --

ம.பி., சட்டப் பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு..! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

16

மத்தியபிரதேச சட்டப்பேரவையில் நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் கமல்நாத் அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டு கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 

ம.பி.யில் காங்கிரஸ் முக்கியத் தலைவராக திகழ்ந்த ஜோதிராதித்ய சிந்தியா, மாநில முதல்வர் கமல்நாத்துடன் ஏற்பட்ட மோதலால் அதிருப்தியாளராக மாறினார். திடீரென கடந்த 10 நாட்களுக்கு முன் பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து அவருடைய ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேரும் பதவியை ராஜினாமா செய்தனர்.

 

இதனால், 230 பேர் கொண்ட ம.பி. சட்டப்பேரவையில் 114 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் சுயேட்சைகள் 4 பேர், பகுஜன் சமாஜ் 2 , சமாஜ்வாதியின் ஒரு எம்எல்ஏ என 121 பேர் ஆதரவுடன் ஆட்சியில் இருந்த கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு சிக்கல் எழுந்தது. காங்கிரசின் பலம் 92 ஆக குறைய, 107 எம்எல்ஏக்களை வைத்துள்ள பாஜக, ஆட்சியை கைப்பற்றத் துடித்தது.

 

எனவே சட்டப்பேரவையில், கமல்நாத் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என ம.பி.ஆளுநர் லால் வி தாண்டனுக்கு பாஜக கோரிக்கை விடுத்தது. ஆளுநரும் கடந்த திங்கட்கிழமையே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட்டார். ஆனால் சட்டப்பேரவை கூடி, ஆளுநர் உரை நிகழ்த்தியவுடன், கொரானாவை காரணம் காட்டி சட்டப்பேரவையை மார்ச் 26-ந்தேதி வரைக்கும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். ஆனால் ச இதை ஏற்காமல் மீண்டும் முதல்வருக்கு கடிதம் எழுதிய ஆளுநர் மறுநாள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இல்லாவிட்டால் மெஜாரிட்டி இழந்ததாக கருதப்படும் என எச்சரிக்கை விடுப்பது போல் கட்டளை இட்டார். ஆனால் இதனை முதல்வர் கமல்நாத் ஏற்க மறுத்து விட்டார்.

 

இதற்கிடையில், சட்டப்பேரவையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடக் கோரி, பாஜக முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சவுகான் உச்ச நீதிமன் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த 3 நாட்களாக உச்ச நீதிமன்றத்தில் காரசார விவாதம் நடந்தது. ராஜினாமா அறிவித்த 22 எம்எல்ஏக்களை பாஜக பெங்களூருவில் சிறை வைத்துள்ளது. அவர்களில் 16 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் இன்னும் ஏற்கவில்லை. 16 பேரையும் பாஜக பிடியிலிருந்து விடுவித்து சுதந்திரமாக விட வேண்டும் என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டது சட்டவிரோதம் . தேவையானால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரட்டும் என்றெல்லாம் காங்கிரஸ் தரப்பில் வாதம் செய்யப்பட்டது.

 

இப்படி உச்ச நீதிமன்றத்தில் 3 நாட்கள் விவாதம் நடைபெற்ற நிலையில் நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று மாலை அதிரடியாக இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ம.பி. சட்டப்பேரவையில் நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேர் நமபிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க விரும்பினால் பாதுகாப்பு தர வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை கர்நாடகா மற்றும் மத்திய பிரதேச டிஜிபிக்கள் செய்ய வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் ம.பி. அரசியலில் உச்ச கட்ட பரபரப்பு எழுந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon