--- --:--:-- --

சூடு பிடிக்கிறது ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கு…! வரும் 4-ந்தேதி விசாரணை!!

ops

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கு மீண்டும் சூடு பிடிக்கிறது.வரும் 4-ந் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என இரு அணிகளாக பிளவுபட்டது. ஆனாலும் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்ததால் அவர் முதல்வரானார்.ஓபிஎஸ் அணியில் 11 எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்தனர். அப்போது சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓபிஎஸ் தரப்பில் எதிர்த்து வாக்களித்தனர். பின்னர் இரு அணிகளும் இணைந்து விட்டன.

 

இந்நிலையில் டிடிவி தினகரன் ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட போது, ஓபிஎஸ் அணி எம்எல்ஏக்கள் விவகாரம் வெடித்தது. கொறடா உத்தரவை மீறி வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய தினகரன் தரப்பிலும், திமுக தரப்பிலும் சபாநாயகரை வலியுறுத்தினர். ஆனால் சபாநாயகர் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

இதனால் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிடக் கோரி திமுக சட்டமன்ற கொறடா சக்ரபாணி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். ஆனால் இந்த வழக்கில் எந்த விசாரணையும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் விசாரணையை துரிதப்படுத்தக்கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவிடம் திமுக தரப்பில் முறையிடப்பட்டது.

 

இதனால் இந்த வழக்கில் வரும் 4-ந் தேதி விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீண்டும் சூடு பிடித்துள்ள நிலையில், ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்களா? என்ற பரபரப்பு தமிழக அரசியலில் எழுந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon