ரவுடி விகாஸ் துபே என்கவுண்டர் – மிரள வைத்த தமிழகத்தை சேர்ந்த கான்பூர் ஐபிஎஸ் தினேஷ் குமார்
உத்திரபிரதேசத்தை கலங்க வைத்து வந்த விகாஸ் துபேயின் ராஜியத்திற்கு முடிவுரை எழுதிய பெருமைக்கு சொந்தக்காரர் தமிழகத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி தினேஷ் குமாரையே சாரும். உத்தரபிரதேச மாநிலத்தை 30 ஆண்டுகளாக தனது குற்றச் செயல்களால் கட்டுக்குள் வைத்திருந்த விகாஸ் துபேயை என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொன்றுள்ளனர் காவல்துறையினர்.
அதற்கு பின்னணியில் இருந்தவர் கான்பூர் எஸ்பி தினேஷ்குமார். தமிழகத்தைச் சேர்ந்த அவர் கான்பூரில் தீரன் தினேஷ்குமார் ஆக மாறியுள்ளார். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள சின்னதண்டா கிராமத்தில் 1986 ஆம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி பிறந்தவர் தினேஷ்குமார்.
கர்நாடக – தமிழக எல்லையில் உள்ள மிகச் சிறிய கிராமமான சின்னதண்டாவிற்க்கு போதிய பேருந்து வசதி இல்லாததால் ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி வரை விடுதியிலேயே தங்கி பயின்று தன் குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரியாக உருவானார் தினேஷ்குமார். விவசாய குடும்பத்தில் பிறந்த தினேஷ்குமாரின் கால்நடை மருத்துவராக வேண்டும் என்ற கனவு ஒரு மதிப்பெண்ணில் சிதைந்தது.

மனம் தளராமல் கோவை வேளாண் கல்லூரியில் பிஎஸ்சி வேளாண்மை படித்தார். காவல்துறையில் அதிரடி அதிகாரிகளான விஜயகுமாரும், சைலேந்திரபாபுவும் தான் தினேஷ்குமார் ஹீரோக்கள். தந்தை மண்வெட்டி பிடித்து விளைநிலத்தில் களமாட நாட்டிலுள்ள கயவர்களை களையெடுக்க துப்பாக்கி பிடிக்க நினைத்தார் தினேஷ்குமார்.
திண்ணிய நெஞ்சோடும், தெளிந்த நல்லறிவோடும் முயன்றதால் முதல் முயற்சியிலேயே 2009 ஆம் ஆண்டு ஐபிஎஸ் ஆனார். பயிற்சிகள் முடிந்து 2013 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த தினேஷ் குமார் குற்றவாளிகளுக்கு கருணை காட்டாமல் கராரானவர். 7 மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக சிறப்பாக பணியாற்றி விட்டு கடந்த மாதம் 15-ம் தேதிதான் கான்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார்.
பதவியேற்று ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில் 30 ஆண்டுகளாக காவல்துறையினருடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த விகாஸ் துபேயின் ரத்தம் தோய்ந்த அத்தியாயத்திற்கு அதிரடியாக முடிவுரை எழுதி இருக்கிறது தினேஷ்குமாரின் அணி.







