சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டகளில் மழை..!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. சென்னையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் ஒரு சில பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் லேசான மழை பெய்தது.
மேலும் அண்ணா சாலை, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, போரூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை கனமழை பெய்தது. வடசென்னை பகுதியில் இடியுடன் கூடிய கன மழையும், சென்னை புறநகர்ப் பகுதிகளில் மிதமான மழையும் பொழிந்தது.
இதேபோல் தர்மபுரி மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது. அங்கு கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் பயிர்கள் புத்துணர்ச்சி பெற்று வருவதாக சாகுபடி செய்த விவசாயிகள் தெரிவிக்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம், வேந்தன் குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் மானாவாரி பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர்.
திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக ஏற்காட்டில் 20 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
கீரனூர், அரக்கோணத்தில் தலா 10 சென்டி மீட்டரும், மீனம்பாக்கம் தோப்பு பகுதிகளில் தலா 15 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
\






