இரண்டு அடி நிலத்திற்காக வட்டாட்சியரை குத்திக்கொலை செய்த ஓய்வுபெற்ற ஆசிரியர்..!
கர்நாடக மாநில எல்லையோர கிராமத்தில் நில தகராறை தீர்க்க சென்ற வட்டாட்சியரை ஓய்வு பெற்ற ஆசிரியர் குத்தி கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பங்காருபேட் அருகே தொட்ட கலஞ்சி கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் வெங்கடாசலபதிக்கும், திப்பனகள்ளி கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்திக்கும் ஓராண்டாக நிலப்பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நிலம் சம்பந்தமான பிரச்சனையை தீர்க்க பங்காருபேட் வட்டாட்சியர் சந்திரமௌலீஸ்வரர் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் தொட்ட கலஞ்சி கிராமத்திற்கு சென்றனர். அப்போது வருவாய் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிலத்தை அளவீடு செய்தபோது இரண்டு அடி நீளம் ராமமூர்த்திக்கு கூடுதலாக சென்றுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த வெங்கடாசலபதி வட்டாட்சியர் சந்திரமௌலீஸ்வரர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தோடு கத்தியைக் கொண்டு குத்தியுள்ளார் .இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த வட்டாட்சியர் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து வட்டாட்சியரை குத்தி கொலை செய்த ஓய்வு பெற்ற ஆசிரியர் வெங்கடாசலபதி பங்காருபேட் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.







