காதல் திருமணத்தால் மணமகன் வீட்டாரை அரிவாளால் வெட்டிய மணமகள் உறவினர்கள்..!
காதல் திருமணம் செய்த பத்தே நாட்களில் புதுமாப்பிள்ளை மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதோடு அவரது தாயாரையும் வெட்டிக் கொன்ற பெண்ணின் உறவினர்களே காவலர்கள் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகே உள்ள சிவகங்கையை சேர்ந்த விக்னேஷ் ராஜாவும் அதே பகுதியை சேர்ந்த சங்கீதாவும் காதலித்து கடந்த 10 நாட்களுக்கு முன் திருமணம் புரிந்தனர்.
இவர்கள் திருமணத்திற்கு பெண்ணின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான பிரச்சனையில் இருவீட்டாரும் சமரசத்தில் ஈடுபட்ட போது ஆத்திரமடைந்த சங்கீதாவின் அண்ணன் முத்துராமலிங்கம் மற்றும் உறவினர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாப்பிள்ளை குடும்பத்தினரை சரமாரியாக வெட்டினர்.
இதில் தாயார் முத்துப்பேச்சி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். புதுமாப்பிள்ளை விக்னேஷ் ராஜா உள்ளிட்ட மூவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். வழியிலேயே நண்பர் அருள் உயிரிழக்க விக்னேஷ் ராஜாவும் அவரது தந்தை லக்ஷ்மணனும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் புதுமணப் பெண்ணின் அண்ணன் முத்துராமலிங்கம், சித்தப்பா அருணாச்சலம் உறவினர் முத்துச்சுடர் ஆகியோரை கைது செய்தனர்.







