புறநகர் ரயில் சேவை குறைப்பு – தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை எழும்பூரில் நடைபெறும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக சென்னை புறநகர் ரயில் சேவை குறைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை மக்களின் பொது போக்குவரத்து சேவையாக பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் மற்றும் பறக்கும் ரயில் பிரதானமாக உள்ளது.
இதில் சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை இயக்கப்படும் புறநகர் சேவையில் லட்ச கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். பணிக்கு செல்பவர்கள், கல்லூி மாணவர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் புறநகர் ரயில் சேவையை நம்பியே உள்ளனர். இந்நிலையில் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக சென்னை புறநகர் ரயில் சேவை குறைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் சைலேந்திர சிங், எழும்பூர் ரயில் நிலையத்தின் 10 மற்றும் 11-ஆம் நடைமேடைகளில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளதாக கூறினார். இதனால், எழும்பூர் ரயில் நிலையத்தின் 5 மற்றும் 6-ஆம் நடைமேடைகளில் இருந்து புறநகர் ரயில்கள் இயக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
வரும் 20-ஆம் தேதி முதல் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு புறநகர் சேவைகள் குறைப்படுவதாகவும், 204 சேவைகளுக்குப் பதிலாக 164 ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதில், குறிப்பிட்ட அளவிலான ரயில்கள் சென்னை கடற்கரைக்குப் பதிலாக எழும்பூரில் இருந்து இயக்கப்படும் எனவும், நடைமேடை மாற்றத்தால், தொழில்நுட்ப காரணங்களுக்காக அதே அளவுக்கான ரயில்களை இயக்கமுடியாது எனவும் சைலேந்திர சிங் விளக்கம் அளித்தார்.
சென்னை கிளாம்பாக்கம் ரயில் நிலையம் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் எனவும், வேளச்சேரி-பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் சேவைக்கான பாதுகாப்பு சோதனை அடுத்த மாத இறுதியில் தொடங்கும் எனவும் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் தெரிவித்தார்.





