தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் ரெட் அலர்ட்..!
நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஒடிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்று அதே இடத்தில் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது வடக்கு திசையில் நகர்ந்து, வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இன்றும், நாளையும் அதி கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஊட்டியில் இன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. உதகையில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் இன்று மூடப்படுவதாக ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். உதகை – கூடலூர் சாலையில் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுவதாகவும் ஆட்சியர் கூறினார்.
கர்நாடகா, கேரள மாநிலங்களிலிருந்து இலகு ரக வாகனங்கள் கல்லட்டி மலைப்பாதை வழியாக உதகைக்கு வரலாம் என்றும் ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு விளக்கமளித்தார்.முன்னதாக, நீலகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்தது. பந்தலூரை அடுத்த எருமாடு, மாங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நேந்திர வாழை மரங்கள் சேதமடைந்தன.
தொடர் மழையால் நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் 20 வீடுகள் சேதமடைந்துள்ளன. ஆறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் 116 குடும்பங்களை சேர்ந்த 553 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.





