மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த விவகாரம் : ஏபிவிபி தலைவர் மீதான வழக்கு திடீர் வாபஸ் ஏன்? அழுத்தம் தான் காரணமா?
சென்னை ஆதம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பக்கத்து வீட்டு மூதாட்டியின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தது தொடர்பாக ஆர்எஸ்எஸ் இயக்க மாணவர் அமைப்பான ஏபிவிபியின் தேசியத் தலைவருமான டாக்டருமான சுப்பையா மீது தொடரப்பட்ட 3 வழக்குகள் திடீர் என வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதற்கு காரணம் புகார் கொடுத்த பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம் தான் காரணம் எனக் கூறப்படுகிறது.
சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கீழ்த்தளத்தில் வசித்து வருபவர் டாக்டர் சுப்பையா சண்முகம். இவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் மருத்துவராக பணிபுரிகிறார். மேலும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மாணவர் அமைப்பான ஏபிவிபியின் தேசியத் தலைவர் பொறுப்பிலும் உள்ளார். அதே குடியிருப்பின் முதல் தளத்தில் சந்திரா சம்பத் என்ற கணவனை இழந்த வயதான பெண் தனியாக வசித்து வருகிறார்.
இந்த அடுக்குமாடி குடியிருப்பில், மூதாட்டி சந்திராவுக்கு சொந்தமான பார்க்கிங் இடத்தில் டாக்டர் சுப்பையா தனது காரை நிறுத்த அனுமதி கேட்டுள்ளார். அதற்கு சந்திரா வாடகை கேட்டதால் இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது. இதனால் டாக்டர் சுப்பையா மூதாட்டிக்கு தொடர்ந்து பல்வேறு வகைகளில் தொல்லை கொடுத்துள்ளார்
இதில் அந்த மூதாட்டி வாசல் கதவு முன்பாக டாக்டர் சுப்பையா சிறுநீர் கழித்தும், குப்பைகளை கொட்டியும் அசிங்கம் செய்த விவகாரம் சந்தி சிரிக்கும் அளவுக்கு சென்று விட்டது. ஒரு டாக்டராகவும், ஏபிவிபி என்ற ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மாணவர் அமைப்பின் தேசிய தலைவராகவும் உள்ள சுப்பையா செய்த இந்த அசிங்க செயலை சிசிடிவி காட்சி பதிவு ஆதாரத்துடன் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் மூதாட்டி தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது.
ஆனால், காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காமல், புகார் கொடுத்த மூதாட்டி தரப்பினரையே காவல்துறையினர் தரக்குறைவாக பேசி அனுப்பியுள்ளனர். பாஜக தரப்பினரின் செல்வாக்கு காரணமாகவே டாக்டர் சுப்பையா மீது நடவடிக்கை எடுக்க காவல் துறையினர் மறுத்ததாக கூறப்படுகிறது.
கொந்தளிப்பை ஏற்படுத்தியது
இந்நிலையில் தான், மூதாட்டியின் வீட்டு வாசலில் டாக்டர் சுப்பையா சிறுநீர் கழிக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது டாக்டர் சுப்பையா. இந்தக் காட்சிகள் எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், கண்டஙை்களும் சரமாரியாக குவிந்தன.. மத்தியில் ஆளும் பாஜகவுக்கு நெருக்கமான அமைப்பின் நிர்வாகி என்பதால், டாக்டர் சுப்பையா மீது நடவடிக்கை இல்லையா? என குற்றச்சாட்டுகள் காவல் துறை மீது குவிந்தது.

3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
இதனால் வேறு வழியின்றி டாக்டர் சுப்பையாவை விசாரணைக்காக வருமாறு ஆதம்பாக்கம் காவல் நிலைய போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் விசாரணைக்கு காவல் நிலையம் செல்லாமல் டாக்டர் சுப்பையா போக்கு காட்டி வந்த நிலையில், போலீசார் அவர் மீது பெண் வன்கொடுமை உட்பட 3 பிரிவுகளில் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.
இதனால், டாக்டர் சுப்பையா எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற நிலை உருவானது. இந்நிலையில் தான், டாக்டர் சுப்பையாவை வழக்கு வம்பில் இருந்து காப்பாற்றும் முயற்சிகள் நேற்று அடுத்தடுத்து விறுவிறுப்பான காட்சிகளாக அரங்கேறின. வழக்கை வாபஸ் பெற மூதாட்டி சந்திரா தரப்புக்கும் நெருக்கடி கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.
சந்திராவின் வீட்டிற்கு சென்ற டாக்டர் .சுப்பையா தமது செயலுக்கு மன்னிப்பு கேட்டதாகவும் அதன் பேரில் இந்தப் பிரச்னையில் சுமூகமாக குடியிருப்பு வாசிகளே பேசித் தீர்த்துக் கொள்வதாக முடிவு செய்யப்பட்டது எனக் கூறி,நேற்றிரவே வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சிறுநீர் கழித்து அசிங்கம்
பாஜக தரப்பினரின் அழுத்தம், நெருக்கடி காரணமாகவே டாக்டர் சுப்பையா மீதான வழக்குகள் வாபஸ் பெறச் செய்யப்பட்டு, மொத்தமாக கை கழுவப்பட்டுள்ளது. ஆனாலும் சமுதாயத்தில் கவுரவமிக்க டாக்டராகவும், ஆர்எஸ்எஸ் கிளையான ஏபிவிபி அமைப்பின் தேசிய நிர்வாகியான டாக்டர் .சுப்பையா செய்த சிறுநீர் கழித்து அசிங்கம் செய்த செயல் நாடு முழுமைக்கும் வெட்ட வெளிச்சமாகி விட்டது.
“என்ன தான் வழக்கை கை கழுவினாலும் அவர் செய்த அசிங்கச் செயல் என்ற கறையை அவ்வளவு எளிதில் கை கழுவ முடியாது என்றே கூறலாம்”







